தேவகரத்திலுள்ள அதிகாரம்
தியானம்: 2019 ஏப்ரல் 20 சனி | வேத வாசிப்பு: யோவான் 19:5-11
‘இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது… என்றார்’ (யோவான் 19:11).
இயேசுவை விடுதலையாக்க மனதாயிருந்த பிலாத்துவின் ஒவ்வொரு முயற்சியையும் யூத அதிகாரிகளும் மக்களும் முறியடித்தனர். இயேசுவும் மெளனமாகவே நின்றார். பிலாத்துவுக்கு ஒரே எரிச்சல். தான் நினைத்தால் இயேசுவை எதுவும் செய்ய தனக்கு அதிகாரம் உண்டு என்று இயேசுவை எச்சரித்தான். ஆனால் இயேசுவோ அமைதியாகப் பதில் தந்தார். அந்த அதிகாரம் பரத்திலிருந்து கொடுக்கப்படாவிட்டால், தம்மேல் பிலாத்துவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார்.
இயேசுவைப் பிடித்து வாரினால் அடித்து, முள்முடி சூட்டி, சிவப்பங்கி தரித்து பரிகாசம் பண்ணினார்கள். அவர் அழகிழந்து கோரமாகக் காட்சியளித்தார். இவை யாவையும் பார்க்கும்போது, இந்த விசாரணை முழுவதும் பிலாத்துவினதும் யூதரினதும் கைக்குள் அடங்கியிருந்ததுபோலத் தெரிகிறது. ஆனால், முழுக்கட்டுப்பாட்டையும் தேவன் தமது கைகளில் வைத்திருந்தார். தம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் இயேசு தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். அநீதியாய் அவர் தண்டிக்கப்பட்டாலும், பாவத்தின் கொடூரம் அதுதான். ஆகவே இயேசு அமைதியாயிருந்தார். அவர் சிலுவையிலே தொங்கியபோதும், ஒரு அதிசய அற்புதத்தை நடப்பிக்காமல் மரணத்தை ஏற்றுக்கொண்டார். யாவும் பிதாவின் கரத்திலிருந்து கொடுக்கப்படுவதை இயேசு உணர்ந்திருந்ததால் யாவையும் ஏற்றுக்கொண்டார். மனிதன் தான் வென்றுவிட்டதாக நினைத்தான். இல்லை; வெற்றி இயேசுவுக்கே! சிலுவை ஊர்வலம் மரண ஊர்வலம் அல்ல. சிலுவை என்ற இலக்கை நோக்கிய பயணம் அது. இயேசு மனித கரத்திலல்ல; தேவனுடைய கரத்திலிருந்தார். ஆகவேதான் அமைதியாக இருந்தார்.
நமக்கு நேரிடுகிற ஒவ்வொன்றும் ஆண்டவரைக் கடந்துதான் நம்மை வந்தடைகின்றன. அதை உணராது நாம் தேவனைக் குறைகூறுகிறோமா. நமக்குத் தீங்கு செய்பவர்கள் நம்மை வென்றுவிட்டதாக நினைக்கலாம். பிசாசும், தானே அதிகாரி என்பது போல நம்மைத் தாக்கலாம். ஆனால், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பது மெய்யானால், தேவனுடைய அனுமதியின்றி நமது வாழ்வில் எதுவும் நடக்காது என்பதை நாம் உறுதியாய் நம்பவேண்டும். தேவனும் காரணமின்றி எதையும் அனுமதிக்கமாட்டார் என்பதுவும் உறுதி. யாவும் தேவனுடைய அதிகாரத்துக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. பாடுகளின் பாதை தோல்வியின் பாதை அல்ல; அது இலக்கை நோக்கிய வெற்றிப்பாதை. தைரியமாக முன்நடப்போமாக!
“தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2).
ஜெபம்: ஆண்டவரே, எங்கள் வாழ்வுமீது உமக்கு மாத்திரமே அதிகாரமுண்டு என்பதை விசுவாசிக்கிறோம். பாடுகளில் கலங்காமல் இனி உம்மையே நம்புவோம். ஆமென்.