தோற்கடிக்கப்பட்டான் சாத்தான்!
தியானம்: 2019 ஏப்ரல் 27 சனி | வேத வாசிப்பு: யாக்கோபு 4:5-10
”… மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்’ (1தீமோ. 4:1).
இளவயதுப் பிள்ளைகளைத் தற்கொலைக்குத் தூண்டுகின்ற இணையத்தள விளையாட்டுப் பற்றிய செய்தி இன்று உலகத்தை உலுக்கி வருகிறது. சிலர் இதில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டனர். இயேசுவின் பெயரைச் சொல்லியே மனிதரைக் கவரக் கூடிய தவறான கொள்கைகளைக்கொண்ட சபைகளும் உருவாகி வருகின்றன. மேலும், சாத்தானை வெளிப்படையாக ஆராதிக்கின்ற சாத்தான் சபைகளும் தோன்றிவிட்டன. இச்சபைக்கான ஆட்சேர்ப்பு ஒருவகையான (மெற்றல்) இசை – பாடல் வாயிலாகவே நடக்கின்றது என்று சமீபத்திலே ஒரு பத்திரிக்கையிலே பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவ்வகைப் பொறிகளில் பெரும்பாலும் கிறிஸ்துவை அறிந்த பிள்ளைகளே அகப்படுகிறார்கள் என்பதே மிகப் பயங்கரமான விஷயம். இன்னும் என்னென்ன நடக்குமோ யாரறிவார்?
இயேசு உலகில் பிறந்தபோதே அவரைக் கொலை செய்ய வகைபார்த்தான் சாத்தான். இயேசு யோர்தான் நதியிலிருந்து வெளியேறியபோது அவரது ஊழியம் ஆரம்பமாகிறது என்று பயந்து, அதைத் தந்திரமாக முளையிலேயே கிள்ளியெறியப் பார்த்தான்; முடியவில்லை. ஊழியப்பாதையிலே பல தொந்தரவுகளைக் கொடுத்துப் பார்த்தான், அங்கும் தோல்விதான். இயேசுவின் சீஷன் மூலமாகவே அவரைக் காட்டிக்கொடுத்து, அவருடைய சொந்த ஜனங்களினாலேயே அவரைச் சிலுவைக்கு அனுப்பி அவரைத் தோற்கடித்துவிட்டதாக எண்ணினான். ஆனால் நடப்பதெல்லாம் பிதாவின் அநாதி சித்தத்தின் நிறைவேறுதல் என்றும், தன்னுடைய தலையே சிலுவையில் நசுக்கப்படும் என்றும் அவன் ஏன்தான் உணரவில்லையோ! இயேசு உயிர்த்தெழுந்தபோது சாத்தானின் வல்லமை முற்றிலும் முறிக்கப்பட்டது. அவன் இப்போது ஒன்றுமில்லை. வெறும் வாலாக மனிதரைப் பயமுறுத்துகிறான் என்பதை நாமும் மறந்துவிடுகிறோம். அவனது அட்டகாசங்கள், வஞ்சகங்கள், அவனுக்கான ஆராதனைகள் யாவுமே முன்னறிவிக்கப்பட்டவை என்று உணராமல் அவன் அழிவை ஏற்படுத்துகிறான் என்றால், இவற்றை அறிந்திருக்கிற நாம் அவனுடைய வலையில் சிக்கி, அவனுடைய சுபாவத்தை நமது வாழ்வில் வெளிப்படுத்துவது தகுமா?
சிலுவையில் தோற்கடிக்கப்பட்ட பிசாசின் கொடுக்கு பிடுங்கப்பட்டாயிற்று. வெகு சீக்கிரத்தில் அவன் நித்திய அக்கினியில் தள்ளப்பட்டுப் போவான். ஆகவே, அவனுக்குப் பயப்படுவதை விடுத்து, எந்த நிலையிலும் வெற்றி வேந்தனாம் இயேசுவுக்காக வைராக்கியமாக வாழுவோமாக.
“… பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” (யாக். 4:7).
ஜெபம்: அன்பின் தேவனே, கிறிஸ்துவின் சுபாவத்தால் தரிக்கப்பட்டு பிசாசுகளின் உபதேசத்திற்கும் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் எச்சரிக்கையோடு வாழ உமதருள் தாரும். ஆமென்.