ஆசிரியரிடமிருந்து…

(மே – ஜுன் 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

பிதாவின் வலதுபாரிசத்தில் நமது மத்தியஸ்தராக அமர்ந்து நமக்காக பரிந்துபேசும் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழை ஜெபத்துடனும் தேவன் இத்தியானங்கள் வாயிலாக கிரியை செய்து வருகிறார் என்ற விசுவாசத்துடனும் வெளியிடுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வு கட்டப்பட்டு வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கும் படியாக தேவன் தந்த அன்பான பங்காளர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்.

தற்போது இந்திய தேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக தேவ பிள்ளைகளாக இணைந்து நம் தேச முழுவதும் வேண்டுதல் செய்து வருகிறோம். தேவன் நமது தேசத்தின்மேல் தமது கண்ணை வைத்திருக்கிறார். யாரும் எதிர்பாராத விதத்தில் அதிசயத்தக்க மாறுதல்களை இந்திய அரசியலில் நம் தேவன் கொண்டு வருவார். நாம் சோர்ந்து போகாமல் ஒருமனபட்டவர்களாக திறப்பின் வாசலில் நிற்போம்.

கடந்த இதழில் நாங்கள் பிரசுரித்திருந்தபடி திருச்சபைகளில நடைபெற்ற லெந்து கால சிறப்புக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற கர்த்தர் கிருபை செய்தார். இக்கூட்டங்களை ஆயத்தம் செய்தவர்கள் உதவி புரிந்தவர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். உங்கள் மனபாரங்களையும் ஜெபத்தேவைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்காக பாரத்தோடு வேண்டுதல் செய்வோம். இத்தியானங்கள் வாயிலாக நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் மே மாதம் 1-20 நாட்களுக்குரிய தியானங்களையும், ஜுன் மாதத்தின் தியானங்களையும் எழுதியுள்ளார்கள். மே 21-31 வரையிலான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். மே மாத தியானங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நமக்கு கிடைத்த நன்மை களையும் கிருபை வரங்களைப் பற்றி அறிந்துகொள்கிறதாயும், ஜுன் மாத தியானங்கள் பிரசங்கி புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அரிய தியானங்களாகவும் உள்ளன. தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்