வெகுமதி பெறும் பணி
அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2019)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: மத்தேயு 20: 1-16
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான் (மத்.20:1).
தமது போதனைகளை நீதிக்கதைகள் மூலம் கற்றுக்கொடுப்பது இயேசுகிறிஸ் துவின் சிறப்பான முறையாகும். இந்நீதிக் கதைகள் உண்மையாகவோ கற்பனையாகவோ நடந்த நிகழ்வுகளாக இருக்கலாம். ஆயினும் அவை ஆழமான சத்தியத்தை எடுத்துரைக்கும். பரலோக இராஜ்யத்தை விளக்கும் வீட்டெஜமானனைப் பற்றிய உவமைக் கதை புரிந்துகொள்ளக் கடினமானதொன்று.
இவ்வுவமையின் சுருக்கமாவது: வீட்டெஜமான் ஒருவன் தன்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த ஒருநாள் அதிகாலையில் புறப்பட்டான் (மத்.20:1). வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி, அவர்களைத் தன் திராட்சத் தோட்டத்துக்கு அனுப்பினான்.
அந்நாட்களில் ஒரு சாதாரண கூலியாளுக்குக் கொடுக்கப்படும் ஒருநாள் கூலி ஒரு பணம் ஆகும். மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப் போய், கடைத் தெருவிலே நிற்கிற வேறு சிலரைக் கண்டு நீங்களும் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணி வேளையிலும், பதினாராம் மணி வேளையிலும் அவன் அவ்வாறே சென்று வேறு சிலரையும் கூலிக்கு அமர்த்தி அவ்வாறே கூலி பேசினான். சாயங்காலத்தில், திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணி வேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
முந்தி அமர்த்தப்பட்டவர்கள், தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: ஒருமணி நேரம் மாத்திரம் உழைத்தவர்களுக்கும் எங்களுக்கும் ஒரேவிதமான கூலி கொடுத்தீரே” என்று முறுமுறுத்தார்கள். அதற்கு வீட்டெஜமான் ஒருநாள் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் நான் நியாயம் செய்தேன். உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா˜ நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். இவ்வுவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?
முதலாவதாக, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தன்னுடைய திராட்சத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடுகிறார். ஆண்டவருக்கென்று இவ் வுலகை நாம் ஆதாயப்படுத்த அநேக காரியங்கள் செய்ய வேண்டியதாயுள்ளது. ஆதாயம் செய்த ஆத்துமாக்கள் அதிக கனிகள் தரும்படி அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். நாம் அமர்ந்துகொண்டு முறுமுறுக்கக்கூடாது. ஆண்டவருக்கு ஊழியம் செய்யவே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். உலகில் மிகவும் விரக்தியடைந்த மனிதன் யாரெனில் இரட்சிக்கப்படாத மனிதனல்ல. அவனுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றி சிறிதே அறிந்துள்ளான். ஆனால் இரட்சிக்கப்பட்ட மனிதன், தான் இவ்வுலகில் வாழ்வதன் காரணத்தை அறியாததினால் அதிக விரக்தியடைந்தவனாயிருக்கிறான். “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” என்று எபே.2:10 கூறுகிறது. தேவனுடைய பண்ணையில் வேலை செய்யும் பணியாட்களாக இருப்பதற்காகவே தேவன் நம்மை இரட்சித்திருக்கிறார்.
இரண்டாவதாக, வெவ்வேறு காலங்களில் வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் ஊழியக்காரர்களாக தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். கிறிஸ்துவின் சபை நிறைவுள்ளதாக ஆரம்பிக்கப்படவில்லை. புதிய ஏற்பாட்டு சபையில் மக்கள் அனுதினமும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக வரலாற்றில் நாம் காண்கிறோம். இக்காலத்திலும் நாம் சபையில் இணைக்கப்பட்டு வருகிறோம். புதிய ஏற்பாட்டு சபையில் அப்போஸ்தலர்கள் என அழைக்கப் பட்டவர்கள் கிறிஸ்துவின் பண்ணையில் முன்னதாக வந்தனர் என்ற ஒரே கார ணத்தால் அதிக வெகுமதிகளைப் பெறப் போவதில்லை. தேவன் பணியாட்களின் மீதே ஆர்வமுள்ளவராய் இருக்கிறார். அவர்கள் எப்பொழுது வேலைக்கு வந்தார்கள் என்பது அவருக்கு முக்கியமல்ல. நீங்கள் வயதான காலத்தில் ஆண்டவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா தேவனுக்காக ஓடியாடி மற்றவர்களைப்போல ஊழியம் செய்ய முடியவில்லையே என்று கவலைப்படாதேயுங்கள். தேவன் உங்களுக்குரிய வெகுமதியை நியாயமாய் அளிப்பது நிச்சயம்.
மூன்றாவதாக, ஆண்டவராகிய இயேசு தாராளமாகவும் நியாயமாகவும் வெகுமதி அளிப்பார். இவ்வுவமை கூறும் செய்தி இதுதான். கூலியாட்கள் ஒவ்வொருவரும் எதிர்பாராத கூலியைப் பெற்றனர். ஒவ்வொருவரும் ஒருநாள் கூலியான ஒரு பணத்தைப் பெற்றுக்கொண்டனர். ஒருவரும் தாங்கள் குறைவாக கூலி பெற்றதாக முறுமுறுக்கவில்லை. முதலாவது அமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கு நியாயமான கூலி கொடுத்த எஜமான் மற்றவர்களுக்கும் தாராளமாய் கூலி கொடுத்தார். தங்களுக்கு ஒருவர் தாராளம் காட்டாததைக் கண்ட மற்றவர்கள் வருத்தப்பட்டு; அவரைக் குறை சொல்வது வழக்கம். ஆனால் இங்கு அப்படியல்ல. நியாயமாய் வெகுமதி கொடுத்த எஜமான் தாராளமாய் கொடுப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
தன்னுடைய கடையில் மிட்டாய்களை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை நோக்கி, “உன் கைநிறைய மிட்டாய்களை எடுத்துக்கொள்” என்றார் கடையின் உரிமையாளர். அச்சிறுமி சிறிது நேரம் தயங்கிய பின்னர், “தயவு செய்து நீங்களே தாருங்கள். ஏனெனில் என்னுடைய கையை விட உங்களுடையது பெரியது” என்றாள்.
மற்றவர்களுடைய வாழ்க்கையோடு நம்முடைய வாழ்வை ஒப்பிட்டு நமக்கு வரும் வெகுமதியைக் கணக்கிட்டு எதிர் பார்ப்போமானால் நமக்கு திருப்தி இராது. தேவனுடைய கரம் நமக்கு வெகுமதியைத் தரும்படி பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். அவர் நீதியோடும் நியாயத்தோடும் பலனைத் தருகிறவர்.
நமது கையைவிட தேவனுடைய கரம் பெரியது! இன்று நாம் அவருக்காக வாழ்வோமானால் நாளை அவர் அதற்குரிய வெகுமதியைத் தருவார்!!
அதிகாலைப் பாடல்:
இரட்சகரை அறிந்தோரே அவரைத் துதியுங்கள்!
நாம் அவருக்குத் தரவேண்டியதை யாரே கூறுவார்
நம்மையும் நமக்குரிய யாவையும் மகிழ்வுடன்
அவருக்கே உரித்தாக்கிடுவோம்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை