பொறாமை

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 1 சாமுவேல் 20:11-42


 மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறு பிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய் … (1 சாமுவேல் 20:35).


“சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி” என்று சாலொமோன் ஞானி கூறியுள்ளார் (நீதி. 14:30). இத்தகைய பொறாமைக்கு சிறந்த ஒர் எடுத்துக்காட்டாக பேரரசர் சாலொமோனைக் கூறலாம். கோலியாத் என்னும் பெலிஸ்திய வீரனை இளைஞனான தாவீது கொன்ற பின்னர் பட்டணத்து பெண்கள் “சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம்” என்று முறைவைத்து பாடி ஆடினார்கள். இதைக் கேட்ட சவுல் அரசன் எரிச்சலுற்றான். தான் இஸ்ரவேல் நாட்டின் முழுமைக்கும் அரசனாக இருந்தாலும் மக்களுக்குப் பிரியமானவன் தாவீது என்ற எண்ணம் அவனை வதைத்தது. பொறாமையும் எரிச்சலும் ஓர் பச்சைக் கண் அரக்கனைப் போல அவனை விழுங்க ஆரம்பித்தது.

சவுல் இருமுறை தாவீதைக் கொல்ல முயற்சித்ததால் அவனால் அரண்மனையில் பணிபுரிய முடியவில்லை. சவுலுடன் அமர்ந்து போஜனம் பண்ணுவதைத் தவிர்த்து வெளியே ஒளித்து கொண்டான். தன்னுடன் தாவீது உணவருந்த வராததின் காரணத்தை சவுல் யோனத்தானிடம் விசாரித்தபொழுது, பெத்லெகேமில் தாவீதின் குடும்பத்தினரின் பலி விருந்துக்குச் செல்ல தன்னிடம் அனுமதி கேட்டதாக யோனத்தான் கூறினான். அது வெறும் சாக்குப்போக்கு என்று சொல்லி தன்னுடைய மகனின் மேல் சவுல் கோபம் கொண்டான். அவனது பிறப்பைப் பற்றியும் தாவீதுடனான நட்பையும் அவதூறாகப் பேசி களங்கப்படுத்தினான். தாவீதைக் கொல்வதற்காக அவனை அழைத்துவரச் சொன்னதற்கு யோனத்தான் எதிர்ப்பு தெரிவித்தான். எனவே தன்னுடைய ஈட்டியை தனது சொந்த மகன் மீதே எறிந்து தனது எரிச்சலைக் காட்டினான். யோனத்தானும் பந்தியைவிட்டு எழும்பி கோபமாய் வெளியேறினான்.

மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறு பிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு, (1 சாமு. 20:35) சவுலுக்கும் மற்றவர்களுக்கும் சற்றும் சந்தேகம் வராமலிருக்க அம்புகளை எறியும் பயிற்சிக்குத் தான் செல்வதுபோல பட்டணத்துக்கு வெளியே புறப்பட்டுப்போனான். அப்பிள்ளையாண்டானை அனுப்பிவிட்ட பின்னர் தாவீது தன்னுடைய ஒளிப்பிடத்திலிருந்து வந்தான். தங்களுடைய வாழ்நாள் நட்பினை இரு நண்பர்களும் புதுப்பித்துக்கொண்டனர். ஒருவரையொருவர் தழுவி முத்தமிட்டு அழுத பின்னர் கனத்த இருதயத்துடன் பிரிந்தனர். இப்பிரிவு சவுலின் எரிச்சலாலும் பொறாமையாலும் நிகழ்ந்தது. இந்த எரிச்சல் உண்மை நிலையை மறைத்து, அடிப்படையான நியாயத்தை நீக்கிவிடுகிறது. காரணங்களின் ஆளுமையானது, உணர்ச்சிக்கு அடிமையாக்கி, இறுதியில் சிந்தைக்கு முரணான செயல்களுக்கு நடத்திச் செல்கின்றது.

தன்னைவிட நன்கு பறக்கும் மற்றொரு பறவையின்மேல் எரிச்சலும் பொறாமையும் கொண்ட ஒரு கழுகைப் பற்றிய கதை ஒன்றை டி.எல்.மூடி கூறியுள்ளார். ஒரு நாள் அக்கழுகு வில்லும் அம்பும் வைத்திருந்த ஒரு வேடனைக் கண்டது. அவனிடத்தில் “உயரமான அந்த இடத்திலுள்ள கழுகை நீ வீழ்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது. தன்னுடைய அம்புக்கு சில இறகுகள் தேவை என்று அவன் கூறினான். உடனே பொறாமை கொண்ட அக்கழுகு தன்னுடைய சிறகிலிருந்து ஒரு இறகை பிடுங்கிக் கொடுத்தது. அதனைத் தன் அம்பில் வைத்து பறந்து கொண்டிருந்த கழுகின் மீது எய்தான். ஆனால் குறி தவறியது. பொறாமை கொண்ட கழுகு தன்னுடைய இறகுகளில் ஒவ்வொன்றாகப் பிடுங்கி அவனிடம் கொடுத்தது. அநேக இறகுகளை இழந்ததால் அக் கழுகால் பறக்க இயலவில்லை. அச்சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வேடன் தப்ப வழியில்லாத அக்கழுகைக் கொன்றான். “மற்றவர்கள்மீது எரிச்சலும் பொறாமையும் கொண்டால் அதிகமான பாதிப்படைபவர் நீங்களே” என்பதே இக்கதையின் நீதியாகும்.

நமக்குள்ளே ஒளிந்திருக்கும் பொறாமை என்ற அரக்கனுக்கு அடிமையாகி அழிந்துவிடாமல் தேவனுடைய அன்பில் வளருவோம்.

அதிகாலைப் பாடல்:

காரிருளிலும் உன் கரம்பிடித்து நடத்துவார்;
உனது பாரச்சுமை யாவையும் இயேசு சுமப்பார்;
இடுக்கமான பாதையிலும் உண்மையாய்
அவருக்காய் வாழ அர்ப்பணிப்பாய் நண்பனே!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை