ஆசிரியரிடமிருந்து…
(செப்டம்பர்-அக்டோபர் 2019)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நம்மை நீதியின் பாதையில் நடத்துகிற நல்ல மேய்ப்பனாம் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகள், தொலைகாட்சி நிகழ்ச்சி, இணையதளம், மற்றும் Whatsapp/SMS ஆகியவற்றின் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். உங்கள் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் சக விசுவாசிகளுக்கும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வையுங்கள். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு தேவன் தந்துள்ள ஆதரவாளர்களுக்காக (Sponsors) அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.
ஈரோட்டில் அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சி.எஸ்.ஐ., பிரப் தேவாலாய Parish Hall இல் சத்தியவசன விசுவாச பங்காளர் கூடுகையையும் 27ஆம் தேதி ஞாயிறு காலை பிரப் ஆலய ஆராதனையில் முன்னேற்ற பணியையும் ஒழுங்கு செய்துள்ளோம். இது தொடர்பான மேலதிகமான விவரங்களையும் அழைப்பிதழையும் ஈரோட்டிலுள்ள பங்காளர்களுக்கு அனுப்பிவைப்போம். இக் கூட்டங்கள் சிறப்பாய் நடைபெற தங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.
தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் நீலகிரி மாவட்டத்திலும் மழையினால் ஏற்பட்ட இயற்கை பேரழிவிலிருந்து மக்கள் மீட்கப்படவும் மீண்டும் அந்த இடங்களில் பேராபத்து வராதபடிக்கும் தேவனிடம் மன்றாடுவோம்.
இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தேவசமுகத்தில் காத்திருத்தல், தேவசித்தத்தோடு இணைந்து சுவிசேஷப்பணியில் நமது பங்கு போன்ற பல காரியங்களை தியானிக்கும் வண்ணம் செப்டம்பர் மாதத்தில் தியானங்களை எழுதியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் கர்த்தருடைய நாமங்களை தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்கள் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் ஊன்ற கட்டுகிறதாயும் இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் மறவாதீர்கள். தேவனுடைய நன்மையும் கிருபையும் உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து வர ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்
