விசுவாசத்தில் உறுதி

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: எபிரெயர் 11:1-40


வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகியபோது கல்லறையினிடத்தில் வந்து… (மாற்கு 16:2).


விசுவாசம் என்பது எப்பொழுதும் தனித்து செல்லும் வீரனல்ல. சில வேளைகளில் விசுவாசத்துடன் பயமும் இணைந்திருக்கும். விசுவாசம் வினாக்கள் எழுப்பாமல் இருப்பதல்ல; மாறாக கேள்விகளின் மத்தியிலும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகும். விசுவாசம் அனைத்துக்கும் விடையளிக்காது; ஆனால் அசாதாரண சூழ்நிலைகளிலும் நம்பிக்கையின் அடிப்படையில் அதன் கிரியைகள் அமைந்திருக்கும்.

வாசனையற்ற, ருசியற்ற, நிறமற்ற ஆக்ஸிஜனையும், ஹைடிரஜனையும், கரையாத, கறுப்பான, ருசியற்ற கார்பன் என்பதுடன் இணைத்து தேவன் எவ்வாறு அழகான வெள்ளை நிறமுடைய இனிப்பான சர்க்கரையாக மாற்றுகிறார் என்பதை நம்மால் முழுவதும் அறிந்து கொள்ளமுடியாது. அதைப் போன்றே தேவனுடைய செயல்களுக்கான அனைத்துக் காரணங்களும் நமக்குத் தெரியாவிட்டாலும், நம்முடைய அனைத்து சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவன் தரும் விளைவை நாம் விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையான விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1). பனிமூட்டத்தின் வழியே நம்மால் எதையும் காண இயலாவிட்டாலும் தேவனை நம்புவதே விசுவாசமாகும்.

ஈஸ்டர் ஞாயிறு காலையில் மகத லேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவரும் ஒரு விசுவாசப் பணியை மேற்கொண்டார்கள். இயேசுவின் சரீரத்தைச் சுகந்தவர்க்கமிட தங்களுக்குள் உடன்படிக்கையிட்டு அதற்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள். ஆனால் அதனை சனிக்கிழமை மாலை வரை அவர்களால் செய்யக்கூடாமற் போயிற்று. ஓய்வு நாள் முடிந்தபின் அவைகளை வாங்கிக்கொண்டு யோசேப்பின் கல்லறைக்கு வந்து ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தை மரியாதை செய்ய நினைத்திருந்தனர்.

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது அவர்கள் கல்லறையினிடத்தில் வந்தார்கள் (மாற்கு16:2). சூரிய உதயத்துக்கு முன்னர் இருட்டோடே தாங்கள் வாங்கிய பொருட்களுடன் எருசலேம் நகர வீதிகளைக் கடந்து வந்திருந்தனர். கல்லறை இருந்த தோட்டத்துக்குள் வந்தவுடன் மிகப் பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்த கல்லறைக்குள் எப்படி செல்வது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் காணப்படும் விசு வாசத்துக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் காணப்படுகிறது. இப்பெண்களால் அக்கல்லைப் புரட்ட இயலாது என்பது தெளிவு. அதற்காக அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து அதற்கான திட்டங்களைத் தீட்டவில்லை. அப்பிரச்சனையை ஆராய ஒரு குழுவையும் அமைக்கவில்லை. தங்களுடைய விசுவாசத்துடன் அன்பான கரிசனையுடன் அக்கல்லறைக்கு அவர்கள் வந்தனர்.

நியூபெளண்ட்லாந்து கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்தது. அது ஒரு புதன் கிழமை மாலை. கப்பலின் தலைவன் 24 மணி நேரத்துக்கும் மேலாக தனது அறையிலேயே செய்வதறியாது இருந்தார். அப்பொழுது அவருடைய தோளை ஒருவர் தட்டவும் திரும்பிப் பார்த்த தலைவர் அங்கு விசுவாச ஜெப வீரரான ஜார்ஜ் முல்லரைக் கண்டார். “கேப்டன், நான் சனிக்கிழமை மதியம் கியூபெக் நகரில் இருக்கவேண்டும்” என்று கூறினார். “அது இயலாத காரியம்” என்று அச்சத்துடனும் திகைப்புடனும் கேப்டன் கூறினார்.

அதிக அடர்த்தியான மூடுபனி இருப்பதால் கப்பலை வேகமாக செலுத்த இயலாததால் சரியான வேளையில் கரை சேரமுடியாது என்பதை உணர்ந்த கேப்டன் “ நான் உதவியற்ற நிலையில் இருக்கிறேன்” என்று முணுமுணுத்தார்.

விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லர் “நாம் வரைபட அறைக்குச் சென்று ஜெபிப்போம்” என்று ஆலோசனை கூறினார். “சூழ்நிலையைமட்டுமே உணர்ந்த அக்கப்பலின் கேப்டன், இந்த பனி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார். இல்லை என்று பதிலளித்த முல்லர் “என் கண்கள் இந்த பனியின்மீது அல்ல; என் வாழ்வின் சகல சூழ்நிலைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜீவனுள்ள தேவன் மேலேயே உள்ளது” என்றார். இருவரும் ஜெபிப்பதற்கு கீழே இறங்கிச் சென்றனர். முல்லர் முழங்காற்படியிட்டு ஜெபித்தார். சில நிமிடங்களில் அந்த பனி விலகியது; கப்பலும் விரைந்து சென்றது. முல்லர் சனிக்கிழமைக்கு முன்னரே கியூபெக் சென்று சேர்ந்துவிட்டார்.

நாமும் விசுவாச வாழ்க்கை வாழ வேண்டுமெனில், கல்லறையை மூடியிருக்கும் கல்லைவிட்டு நம்முடைய கண்களை அகற்றி, அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை நோக்க வேண்டும். அக்கல்லறையின் கல் தங்களுக்குத் தடையாக இருக்கும் என அப்பெண்கள் அறிந்திருந்தும் சுகந்த வர்க்கமிட தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அதிகாலமே தங்களை ஆயத்தமாக்கிக்கொண்டு, இருளில் அக்கல்லறைத் தோட்டத்துக்கு வந்தனர்.

விசுவாசம் என்பது வினா எழுப்பாது என்பதல்ல; தேவனுடைய வல்லமைக்கு முழுதும் நம்மை ஒப்புவிப்பதாகும்.

அன்பானவர்களே, இன்று உங்களுடைய விசுவாசத்தை எப்படி நீங்கள் செயலில் காட்டுவீர்கள்?

அதிகாலைப் பாடல்:

ஒப்பற்ற பூரண கிருபையே,
பெலவீன என் இருதயத்தை எழுப்பட்டும்.
எனக்காக நீர் மரித்தீரே;
என் அன்பும் உண்மையாகவும் மாறாததாகவும்
உமக்காக எரிந்து பிரகாசிக்கட்டும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை