ஆவிக்குரிய குருட்டுத்தன்மை

தியானம்: 2019 செப்டம்பர் 7 சனி | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 4:8-18

…காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப் படாதவைகளோ நித்தியமானவைகள் (2கொரி.4:18).

கண்களில் வெண்படலம் படருமானால் பார்வை மங்கிவிடும். அது சரிப்படுத்தப்படாவிட்டால் கண்கள் குருடாகும் அபாயமும் உண்டு. காணப்படுகிறவற்றைக் காண்கின்ற நமது சரீரக்கண்களுக்கு இத்தனைக்கவனம் தேவையென்றால், காணப்படாதவைகளைக் காண்பதற்கு நமது ஆவிக்குரிய கண்களுக்கு எவ்வளவு கவனம் தேவை! அது என்ன ஆவிக்குரிய கண்கள்? அதுதான் விசுவாசக் கண்கள்; காணப்படாதவைகளை வார்த்தையின் அடிப்படையில் காணும் கண்கள். அது இவ்வுலகின் அழிந்து போகும் காரியங்களை நோக்காது; என்றும் நிலைத்திருக்கும் நித்தியத்தையே நோக்கும். கொஞ்சக்காலம் அனுபவிக்கிற இந்த உலக பாடுகளை அல்ல; நித்திய சந்தோஷத்தையே அவை நோக்கும். ஆனால் பார்வையுள்ள சரீரக்கண்கள் சில சமயம் உலகின் உண்மைகளைக் காணமுடியாதபடி குருடாகிவிடுகிறது. கண்ணால் காண்பதெல்லாம் உண்மையல்ல. இப்படியிருக்க, நாம் யார் என்பதையும், ஆவிக்குரியவற்றையும் அறிந்தும் உணர்ந்தும், மீண்டும் இவ்வுலகிலேயே உழலுவோமானால் நாமும் ஆவிக்குரிய குருடர்தானே!

இந்த ஆவிக்குரிய குருட்டு தன்மைக்கு நமது பாவநிலையே காரணம் காலத்துக்குக்காலம், அவனவனுக்கு ஏற்றபடி மதிப்புள்ளவை தேவையானவை என்று தான் கருதுவதை நித்தியத்தோடு ஒப்பிட்டுப்பார்க்க மனிதன் தவறிவிடுகிறான். இதன் விளைவாக நமதுநேரம், திறமை, தாலந்து யாவையும் அழிந்துபோகும் சந்தோஷங்களைச் சம்பாதிக்கும்படி செலவழித்து உலகுக்குள் மூழ்கிப்போகிறோம். “இவ்வுலகில் வாழுகின்ற எந்த மனுஷனானாலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனோடு சரியான உறவை பேணாமல் போனால், ஒருநாளில் தன்னை சிருஷ்டித்த கர்த்தருக்கு முன்பாக நிற்கும் வேளையில், இந்தப் பூமியிலிருந்து அவன் சாதித்த, தனக்கென சொந்தமாக்கிக்கொண்ட அனைத்தும் ‘ஒன்றிற்கும் மதிப்பில்லாதவைகள்’ என்ற உண்மையைக் கண்டு திகைத்துப் போவான்! இது நிச்சயம்” என்று ஒரு பக்தன் எழுதுகிறார்.

தன் துயரங்களையெல்லாம் எப்பொழுதும் நித்தியத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து, தனது ஆவிக்குரிய கண்களை எப்பொழுதும் பாதுகாத்துக் கொண்டவர் பவுல். நமது கண்களை நித்தியத்தை நோக்கித் திருப்புவோம். முடியாவிட்டால், பரம வைத்தியராகிய ஆண்டவரிடம் இன்றே போய், நமது ஆவிக்குரிய கண்களைச் சரிபார்த்துக்கொள்வோம். சரீரக்குருடு சரீரத்தோடு முடிந்துவிடட்டும். ஆனால் ஆவிக்குரிய குருட்டுத் தன்மையை சரிபார்க்காவிட்டால் நமது நித்திய வாழ்வு அழிந்துபோகும்.

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபிரெயர் 11:1).

ஜெபம்: ஆண்டவரே, நித்திய வாழ்விற்கு தடையாய் இருக்கும் ஆவிக்குரிய குருட்டுத் தன்மை எங்களைவிட்டு நீங்க பெலன் தாரும். ஆமென்.