தெய்வமா? பிசாசா?

தியானம்: 2019 செப்டம்பர் 10 செவ்வாய் | வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 4:1-7

…இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி.4:4)

ஒரு கண்ணுக்குப் புதிய லென்ஸைப் பதித்து, அதனால் கிடைத்த பார்வையின் பிரகாசத்தை அனுபவித்த சந்தோஷத்தில் அடுத்த கண்ணுக்கும் அறுவை சிகிச்சைக்காகச் சென்றிருந்தேன். எதிர்பார்ப்போடு கட்டுகளை அவிழ்த்தபோது, ஏமாற்றமே காத்திருந்தது. இருட்டு; முழு இருட்டு. ஒன்றுமே தெரியவில்லை; தடுமாறினேன். ஏறத்தாழ ஒருநாள் முழுவதும் கண்ணில் பார்வை இருக்கவில்லை. (பின்னர் சிறிது சிறிதாக பார்வை கிடைத்தது) அந்நேரம் பார்வை கிடைக்காத துக்கத்தைவிட, கண் குருடாவது இத்தனை பயங்கரமென்றால், சுவிசேஷத்திற்கு மனது குருடாகினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்ற சிந்தனைதான் என்னை அதிகம் குழப்பியது.

நாம் நாடித் தேடவேண்டியதும், நமக்குத் தேவையானதும் தேவ பிரசன்னமும், அவரது வார்த்தைகளுமேயாகும். இந்த சுவிசேஷ வார்த்தைகள் நமது வாழ்வில் வரும்வரை, நாம் வாழுவது இருட்டில்தான் என்ற உணர்வுகூட நமக்கு வருவதில்லை. மங்கலான வெளிச்சத்திலும் இருளின் மத்தியிலும் தொடர்ந்து இருக்கும்போது நமது கண்கள் அதற்குப் பழகிவிடுகிறது. அதுபோல கிறிஸ்து இல்லாத இருளுக்குள், மேலோட்டமான கிறிஸ்தவ வாழ்வில் பழகிவிட்ட நமது மனது, தான் குருடு என்பதை உணர மறுக்கிறது. இதுதான் வாழ்வு என்று ஏமாற்றமடைகிறது. “தேவகிருபையை இயேசுகிறிஸ்துவுக்குள் ஜனங்கள் காணமுடியாதபடி அவர்களைக் குருடாக்கி, அவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாதபடி செய்வதே இன்று பிசாசின் முதல் முயற்சியாக இருக்கிறது. இதில் இரட்சிக்கப்பட்ட புதிய விசுவாசி, தனக்கென தேவன் வைத்திருக்கும் திட்டமான நோக்கத்தைக் காணமுடியாதபடி அவனையும் குருடாக்க முயற்சிக்கிறான். இதில் வெற்றியும் அடைந்துள்ளான்” என்று ஒருவர் எழுதுகிறார்.

அன்றாடம் அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவு, பணம் புகழ் சந்தோஷம் என்று பல அழுத்தங்களினால் மக்களின் மனதை சுவிசேஷத்திற்கு குருடாக்கி வைத்திருக்கும் பிசாசின் தந்திரத்திற்கு எச்சரிக்கையாயிருப்போம். சுவிசேஷத்திற்கு குருடானவர்கள் தம்மை அறியாமலே பிசாசைத் தமது தெய்வமாக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நமக்குத் தேவையானதும் நமது வாழ்வுக்கு ஒளி தருவதும் தேவனுடைய வார்த்தை ஒன்றே. அந்த சுவிசேஷத்தை முதலில் நாம் பெற்றுக்கொள்வோமாக. பின்னர், அதைப் பிறருக்கு எடுத்துச் செல்லுவோமாக. மக்களைப் பிசாசின் குருட்டாட்டத்திலிருந்து காப்பாற்ற நாம் முன்வருவோமாக.

கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள் (சங். 96:2).

ஜெபம்: கர்த்தாவே, கிறிஸ்துவின் சுவிசேஷம் என்ற ஒளிக்கும், தேவசித்தம் என்ற வழிக்கும் என்னை ஒப்புக்கொடுத்து, பிறரையும் அந்த ஒளிக்குள் நடத்த எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.