சிலுவை சுமத்தல்

தியானம்: 2019 செப்டம்பர் 21 சனி | வேத வாசிப்பு: லூக்கா 14:25-35

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்.14:27).

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், சிலுவை என்றால் அதுமரணம் ஒன்றையே குறிக்கும். அந்நாட்களில் சிலுவை சுமக்கிறவன் ஒருபயங்கரக் குற்றவாளியாயிருப்பான். அவன் சிலுவையை மறைத்துச் சுமக்கமுடியாது. போர்வீரர் சூழ எல்லோரும் காணும்படி, எருசலேம் வீதியிலே தான் அறையப்படப் போகின்ற சிலுவையைத் தானே சுமந்துசெல்ல வேண்டும். ஒருவன் சிலுவை சுமந்து செல்லுகிறான் என்றால், “அவன் மரணமடையும் இடத்திற்கே சென்று கொண்டிருக்கிறான்” என்பதில் சந்தேகமே இருக்காது. இனி ஒருபோதும் திரும்பிவர முடியாத பாதையில் அவன் சென்றுகொண்டிருக்கிறான். அவன் இவ்வுலகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரியப்போகிறான். இனி உற்றார் உறவினர், இவ்வுலக காரியங்கள் எதனையும் அவன் பார்க்கமாட்டான். சிலுவை சுமந்து செல்லும் வழி அவமானத்திற்குரியது. நிந்தைகளும் ஏளனங்களும் நிறைந்த வழி. பாடுகளும் உபத்திரவங்களும் நிறைந்த வழி. மரணமடைய போகிறவன் என்று யாரும் பரிதாபம்கூடக் காட்டமாட்டாத வழி. தாகமும் பசியும் வேதனையும் கண்ணீரும் நிறைந்த வழி.

‘சிலுவை சுமத்தல்’ என்பது இதுதான். இயேசு சுமந்த சிலுவையும் இதுதான். ஆனால் அவரோ என்ன குற்றம் செய்தார் சிலுவை சுமக்க? அவர் நமது பாவத்திற்காக, இவ்வுலக பாவத்திற்காகவே சிலுவை சுமந்துசென்றார். அவர் சுமந்த அந்தச் சிலுவையை யாரும் சுமக்கமுடியாது. இன்று நாம் நமது சிலுவையைச் சுமந்து, அவர் நடந்த பாதை செல்லவே அழைக்கப்பட்டுள்ளோம். சிலுவைப் பாதை மரணத்தின் பாதை; நம்மை ஆட்டிப்படைக்கும் சுயம் மரிக்கும் பாதை. அப்பாதையானது தேவனின் சித்தத்தை மட்டுமே செய்வதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கிற பாதை. “சிலுவையின் மெய்யான உண்மைகளை நாம் அறிந்திருந்தாலொழிய, ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் இருந்திடவேண்டிய சிலுவையைக்குறித்து இயேசு கூறிய பொருளை நாம் செம்மையாய் உணர்ந்துகொள்ள முடியாது” என்று ஒரு பக்தன் எழுதுகிறார்.

இந்தச் சிலுவையைக் குறித்தே, பவுல் மேன்மை பாராட்டினார். அவர் தன் சிலுவையை அனுபவ ரீதியாகச் சுமந்தவர். பல நெருக்கங்கள் நிந்தைகள் மத்தியிலும் கிறிஸ்துவின் சாட்சியைக் காத்துக்கொள்வதில் அவர் அடைந்த பாடு துன்பம் கணக்கற்றவை. ஆனால் அவர் கிறிஸ்துவின் பாதையைவிட்டு பின்வாங்கிடவில்லை.

இப்போது நாம் சொல்லுவோம், நம் சிலுவையை அறிந்து மனப்பூர்வமாய் அதைச் சுமக்க நாம் ஆயத்தமா? கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? (ரோமர் 8:36).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாச மோசம், உயர்வு, தாழ்வு, நிகழ்காரியம், வருங்காரியம் இவைகளில் எது ஒன்றும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னைப் பிரித்துப்போடாதபடி எங்களை காத்தருளும். ஆமென்.