ஊழியனாகிய இயேசு

தியானம்: 2019 அக்டோபர் 20 ஞாயிறு | வேத வாசிப்பு: யாவான் 13:1-10

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா.13:5).

சுவிசேஷ பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் ஊழியத்தை ஆரம்பிக்கும் முன்பு வேதாகம கல்லூரி, ஊழியப்பயிற்சி கல்லூரி என்பவற்றில் சேர்ந்து, அல்லது, ஊழியத்தில் அனுபவம் கொண்டவர்களின் உதவியோடு, ஊழியத்தில், தமது வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய நன்நெறிகள், ஊழிய முறைமைகள், வேதாகமத்தையும் கிறிஸ்துவையும் குறித்த பாடங்கள் போன்ற அநேக காரியங்களைக் கற்றுக்கொள்வார்கள்.அன்று இயேசுவும் தமது பணியை தொடரவிருந்த சீஷர்களுக்கு அநேக பாடங்களை தமது வார்த்தையிலும் நடத்தையிலும் கற்றுக்கொடுத்தார். இவற்றுள் ஒன்றுதான் யோவான் குறிப்பிட்டுள்ள கடைசி இராப்போஜன சம்பவம்.

இதன்போது இயேசுதாமே தமது சீஷர்களின் கால்களைக் கழுவி துடைத்தார் என்று பார்க்கிறோம். இயேசு தமது சீஷரில் வைத்திருந்த அன்பு, பிதா தம்மிடத்தில் கொடுத்த பணியின் பொறுப்பு, தன் பணியில் கொண்டிருந்த பூரண அர்ப்பணிப்பு, மாசற்ற தாழ்மை, சீஷருக்கு முன்மாதிரி என்று பல பாடங்களை இது நமக்குக் கற்பிக்கிறது. அன்று இயேசு செய்தது ஒரு அடிமையின் ஊழியம். தம்மை ஒரு ராஜாவாகக் காண்பித்து எருசலேமுக்குள் நுழைந்தவர், அந்தக் கடைசி பஸ்கா இரவிலே தமது சீஷர்கள் தமக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று எண்ணாமல், தாமே சீஷருக்குப் பணிவிடை செய்தாரே. இந்த மனப்பாங்கு இன்று நம்மிடம் உண்டா? இயேசு நமக்குக் காட்டிப்போன மாதிரி இதுதான். ஆனால் இன்று கால் கழுவுதல் என்பது, பெரிய வியாழனில் ஒரு பாரம்பரியமாக சில இடங்களில் முன்னெடுக்கப்படுகிறதே தவிர, உண்மையான மனத்தாழ்மையை ஊழியர் என்று சொல்லிக்கொள்கிற நம்மிடம் காண முடிகிறதா என்று சிந்திப்போம்.

“முதன்மையாய் இருக்க விரும்புகிறவன் ஊழியக்காரனாய் இருக்கவேண்டும் (மத்.20:27)” என்பதே ஆண்டவர் கற்றுத்தந்த பாடம். இப்படியிருக்க, பெருமையும் மேட்டிமையும் தேவ ஊழியராகிய நம்மில் காணப்படுவது நியாயமா என்பதைச் சிந்திப்போமாக. இன்று நாம் விரும்புவது என்ன? இயேசுகிறிஸ்துவின் மகிமையைப் பல விதங்களில் எடுத்துக்காட்டிய யோவான், இங்கே அவரை ஒரு தாழ்மையுள்ள ஊழியனாக நமக்குக் காட்டியுள்ளார். அவர் வழிநடக்க நாம் ஆயத்தமா?

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படிவராமல், ஊழியஞ்செய்யவும், அநே கரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத்.20:28).

ஜெபம்: ஆண்டவரே, இறுதி இராப்போஜனத்தின்போது நீர் கற்றுக்கொடுத்த தாழ்மையின் சிந்தையை நாங்கள் தரித்துக்கொள்ளவும், உண்மையான மனத் தாழ்மையோடே நடந்துகொள்வதற்கும் உமது பெலன் தாரும். ஆமென்.