ஆலோசனைக் கர்த்தர்

தியானம்: 2019 அக்டோபர் 21 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 62:1-12

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் (யோவான் 14:1).

என் தந்தையின் மரணவேளையில், அவர் அருகில் கலக்கத்தோடிருந்த எனக்கு, அந்த நிலையிலும் அவர் என்னிடம் இறுதியாகக் கூறிய ஓரிரு ஆலோசனைகள் இன்றும் தேவனைவிட்டு நான் வழிவிலகிப்போகாமல் என்னை வழிநடத்துவதையிட்டு சாட்சி கூறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

“ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்” (நீதி.11:14). அன்று இயேசுவும், தமது சீஷர்களுக்கு அவ்வப்போது அநேக ஆலோசனைகளைக் கூறிவந்தார். குறிப்பாக உலகில் தமது வாழ்நாட்கள் முடிவடையும் நேரம் மிகவும் நெருங்கிவிட்டதை உணர்ந்து, சீஷர்களோடுகூடிய கடைசி இராப்போஜனத்தின் பின்பும் கலக்கத்தோடிருந்த சீஷர்களை ஆறுதல்படுத்தினார் ஆண்டவர். தாம் போய் ஒரு ஸ்தலத்தை அவர்களுக்கு ஆயத்தப்படுத்தி, திரும்பவும் வந்து அவர்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்வதாக கூறினார். இது சிந்திக்க கடினம் என்றாலும், “தேவனிடத்திலும், தம்மிடத்திலும் விசுவாசமுள்ளவர்களாய்” இருக்கும்படி ஆலோசனை கூறினார். தாம் இதுவரை அவர்களோடு கூடவே இருந்து, கற்றுக்கொடுத்த அனைத்துக் காரியங்களையும் மனதிற்கொண்டு, விசுவாசத்தோடு தொடர்ந்தும் நடக்கும்படியான ஆலோசனையையே இயேசு கூறினார். இதற்கூடாக யோவான், இயேசு ஒரு தேவகுமாரனாக, மனுஷகுமாரனாக இருந்தாலும், அவரை ஒரு “ஆலோசனைக்காரராக” காண்பிக்கிறார். ஆனால், ஏற்கனவே, இவரே “ஆலோசனைக் கர்த்தர்” என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்துவிட்டார் (ஏசாயா 9:6)

இன்று அநேக ஆலோசகர்கள் நம் மத்தியில் எழுந்துவிட்டார்கள். ஆனால் ஆண்டவரே நமது பெரிய ஆலோசகர்; அவரே நித்திய ஆலோசகர். அவருடைய சத்திய வார்த்தை இன்றும் நமக்கு ஆலோசனை தரும் ஆசானாக நமது கைகளிலேயே இருக்கிறது. அதன்படி நாம் நடப்போமேயானால் என்றும் நாம் ஆண்டவருடன் வாழுகின்ற சிலாக்கியத்தை பெற்றுக்கொள்வது நிச்சயம். ஆகவே, இந்நாளிலும் வாழ்க்கையில் எவ்வகையான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும், வழி தெரியாமல் தடுமாறி நின்றாலும், முதலில் நமது பெரிய ஆலோசகரின் பாதத்தில் அமருவோமாக. அவர் நாம் செய்யவேண்டியதை, நாம் போகவேண்டிய இடத்தைக் காட்டித்தருவார். நாம் தடுமாறவேண்டிய அவசியமே இல்லை.

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங். 32:8).

ஜெபம்: ஆலோசனையில் ஆச்சரியமான தேவனே, வாழ்வின் எந்தச் சூழலிலும் மனிதர்களின் ஆலோசனைகளை நாடி சென்றிடாமல் உம்முடைய ஆலோசனையின்படியே நடப்பதற்கு எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.