பரிந்துபேசும் ஜெபம்
தியானம்: 2019 அக்டோபர் 27 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 17:1-26
இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து,. (யோவா.17:1).
முழுமனிதனாக உலகில் வாழ்ந்த இயேசு சகலநிலையிலும் நமக்கு முன் மாதிரியை வைத்துப்போயுள்ளார். அதில் மிகமுக்கியமான ஒன்று ஜெபம்; அவர் எல்லா வேளையிலும் தனித்திருந்து பிதாவிடம் ஜெபிக்கின்ற ஒருவராகக் காணப்பட்டார்.
இயேசு, தம்முடைய வேளை மிகவும் நெருங்கிவிட்டதை அறிந்தவராக தமது கண்களை வானத்திற்கு நேராக ஏறெடுத்து தம் பிதாவை நோக்கி ஜெபித்த நீண்ட ஜெபத்தைத்தான் யோவான் 17ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இந்த நீண்ட ஜெபத்தை மூன்றாகப் பிரித்துப்பார்க்கலாம். முதற்பகுதியிலே இயேசுவானவர் தம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறதைக் காண்கிறோம். அடுத்ததில், பிதாவாகிய தேவன் தமக்குக் கொடுத்த தம்முடைய சீஷர்களுக்காக ஜெபிக்கிறார். இறுதிப் பகுதியில் அவரை விசுவாசிக்கிற நம் அனைவருக்காகவும் இயேசு ஜெபிக்கிறார். ஆம், நமது ஆண்டவர் பரிந்து பேசி ஜெபிக்கின்ற ஒருவர். அன்று மாத்திரம் அல்ல; இன்றும் என்றும் தம்மை விசுவாசிக்கிறவர்கள் அனைவருக்காகவும் பிதாவின் வலது பாரிசத்திலிருந்து வேண்டுதல் செய்துகொண்டே இருக்கிறார். அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோ. 8:26).
ஜெபம் பல அம்சங்களைக் கொண்டது. துதி, ஸ்தோத்திரம், நன்றி, என்று கடந்து சென்று, பிறருக்காக வேண்டுதல் செய்வது மிக முக்கியமாகும். இந்தப் பரிந்து மன்றாடும் ஜெபமானது, “திறப்பின் வாசலில்” நின்று ஜெபிக்கும் ஜெபத்துக்கு ஒப்பானது. அன்று இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தேவனைக் கோபப்படுத்திய தருணங்கள் பல. ஒரு தடவை அவர்கள் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி அதை வழிபட ஆரம்பித்தனர். இதனால் தேவகோபத்திற்கு ஆளாகினார்கள். கர்த்தர் அவர்களை அழித்துப்போட நினைத்தார். ஆனால், மோசேயோ அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபித்தான். அதாவது மோசே அவர்களுக்காக பரிந்து பேசி ஜெபித்தான் (சங்.106:23).
ஜெபம் என்னும்போது, இயேசு நமக்குக் காட்டிய மாதிரியை நாம் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. எல்லா நிலையிலும், அவர் மற்றவர்களுக்காகவே அதிகமாக ஜெபித்தார். நமக்காகவும், நமது குடும்பங்களுக்காகவும் போராடி ஜெபிக்கின்ற நாம், பிறருக்காகவும் பரிந்துபேசி திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க நம்மை ஒப்புவிப்போம்.
..எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல் களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும் (1தீமோ. 2:1).
ஜெபம்: ஜெபத்தை கேட்கும் ஆண்டவரே, எங்களது ஜெபங்கள் சுயநலம் நிறைந்ததாகவே இருந்திடாதபடி, அவற்றிலும் உம்மையே பிரதிபலிக்க அருள் செய்யும். ஆமென்.