எந்நிலையிலும் இயேசுவுக்காய்…
தியானம்: 2019 அக்டோபர் 28 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 13:31-38
…எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாயென்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவா.13:38).
நன்றாகப் பழகிய ஒருவரைத் தெரியாது என்று சொல்லுவதற்கு எத்தனை துணிவு வேண்டும்! ஆனால் இந்தத் துணிவுக்கு பின்னால், அநேகமாக பயமும் இருக்கும். இதுதான் பேதுருவுக்கும் நேர்ந்தது.
பேதுரு, இயேசுவுக்கு மிக நெருக்கமாக அவருடனேயே இருந்த ஒருவன். தம்மை யார் என்று சொல்லுகிறார்கள் என்று இயேசு கேட்டபோது, தாமதமின்றி, ‘நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்’ என்று அறிக்கையிட்டவன் இவன்தான். மாத்திரமல்ல, ‘உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்’ என்றான். அப்பொழுது ஆண்டவர், சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மறுதலிப்பாய்’ என்று கூறியிருந்தார். ஆனாலும், இயேசு பிடிக்கப்பட்ட அந்த இராத்திரியிலே பிரதான ஆசாரியனின் அரண்மனையில் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, பேதுருவைச் சிலர் அடையாளங்கண்டனர். இவனும் இயேசுவோடு கூட இருந்தவர்களில் ஒருவன் என்றனர். ஆனால் பேதுருவோ, ‘நான் அவரை அறியேன்’ என்று ஒரு முறை அல்ல; மூன்று முறைகளாக மறுதலித்துவிட்டான் (யோவான் 18:15-27). அப்போது சேவல் கூவிற்று. சேவல் கூவிய சத்தத்தைக் கேட்டபோதுதான் இயேசு கூறியது பேதுருவுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவன் மனங்கசந்து அழுதான் என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். பேதுரு மெய்யாகவே எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்!
பேதுரு, சூழ்நிலைக்குப் பயந்துவிட்டான். என்றாலும், பின்னர் தன் தவறை உணர்ந்து அவன் அடைந்த வேதனை நிச்சயம் அவனைப் பாதித்திருக்கும். இன்றும் நம்மில் பலர், இயேசுவோடு மிக நெருக்கமான உறவில் இருந்தும், சூழ்நிலைகளுக்குப் பயந்து பின்வாங்கிப் போகிறோம். கிறிஸ்துவுக்காய் எதையும் செய்வேன் என்று சூளுரைத்த பலர், தமது பதவி, அந்தஸ்து என்பவற்றை இழக்க நேரிடும் என்று காணும்போது பின்வாங்கி கிறிஸ்துவை மறுதலித்திருக்கிறார்கள். நமது காரியம் என்ன? எந்த நிலையிலும், எந்த இழப்பிலும் கர்த்தருக்காக வைராக்கியம் பாராட்டுகின்ற ஆத்துமாவை ஆண்டவர் தேடுகிறார். தம்மை மறுதலித்திருந்தாலும், மனந்திரும்பிய பேதுருவிடம் ஊழியத்தை ஒப்புவித்த ஆண்டவர், இன்று நம்மையும் சேர்த்துக்கொள்ள ஆவலாயிருக்கிறார். நாம் என்ன சொல்லப் போகிறோம்?
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என்பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன் (மத். 10:32).
ஜெபம்: எங்களை அழைத்தவரே, நான் இயேசுவின் பிள்ளை என்று அறிக்கை பண்ணியது மட்டுமல்லாமல் அதற்கேற்ப வாழ என்னை உமது கரத்தில் ஒப்புவிக்கிறேன். ஆமென்.