சமாதானத்தின் தேவன்
தியானம்: 2019 அக்டோபர் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 14:27-31
…என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை… (யோவா.14:27).
சமாதானம்! சமாதானம்! என்று கூறி, உலகநாடுகள் முழுவதும் எடுக்கின்ற பிரயத்தனங்கள் சொல்லில் அடங்காது. எப்போது பாவம் மனிதனுக்குள் நுழைந்ததோ அப்போதே மனிதன் சமாதானத்தை இழந்துவிட்டான். அதனால் கலக்கமுற்ற மனிதன் சமாதானத்தைத் தேடி அலைகிறான்.
சமாதானம் என்பது மிகவும் பழகிப்போன ஒருசொல் என்றாலும், அந்த சமாதானம் மனிதனிடம் இல்லை என்பதுதான் உண்மை. சமாதானம் என்பதைக் குறித்துப் பல விதங்களில் சிந்திக்கலாம். எல்லாம் நிறைவாக, பாதுகாப்பாக இருக்கும்போது ஒருவித சமாதானத்தை நாம் உணருகிறோம். யுத்தங்கள் ஓய்ந்துவிட்டால் அதையும் சமாதானம் என்கிறோம். யூதர்கள் ஒருவரையொருவர், ‘ஷாலோம்’ என்று வாழ்த்துவார்கள், அதற்கு ‘சமாதானம்’ என்று அர்த்தமாம். ஆனால் இவைகள் மாறிப்போகக் கூடியன. சூழ்நிலைகளைச் சார்ந்திருக்கின்ற சமாதானம், சூழ்நிலை மாறும்போது குழம்பிவிடக்கூடிய சாத்தியமுண்டு. மெய் சமாதானம் உள்ளம் சார்ந்தது. அதனை உலகத்தால் கொடுக்கமுடியாது. உலகம் கொடுக்கின்ற சமாதானம் உலகத்தோடு முடிந்துவிடும். ஆகவேதான், ஆண்டவர் தமது சமாதானத்தைத் தமது பிள்ளைகளுக்கு அருளுகிறார். ஆண்டவர் மாறாதவர்; அதுபோலவே அவர் அருளும் சமாதானமும் மாறாது. அது கிறிஸ்துவுக்குள்ளான சமாதானம். சூழ்நிலைகள் அதை குழப்ப இயலாது.
இயேசுவே சமாதானப்பிரபு என்று ஏசாயா முன்னரே உரைத்துவிட்டார் (ஏசா. 9:6-7). இயேசு குறிப்பிட்ட சமாதானம் என்பது, தேவனோடு ஒப்புரவாகுதலை இயேசு நமக்குத் தருவதால், நம்பிக்கையும் உண்மைத்துவமும் இணைந்த ஒரு அமைதி நமது ஆத்துமாவில் தோன்றுமே, அதுதான் இயேசுவுக்குள்ளான சமாதானம். இயேசு பிறந்தபோது, ‘பூமியிலே சமாதானம்’ என்று தேவதூதர்கள் பாடிய சமாதானம் இதுவேயாகும். கடைசி இராப்போஜனத்தன்று இயேசு சீஷருக்குக் கற்றுக்கொடுத்த சமாதானமும் இதுவே. இதனை உலகத்தலைவர்கள் சம்பாதிக்க முடியாது. மாறாத உண்மை சமாதானத்தின் ஊற்று இயேசுகிறிஸ்து ஒருவரே. அவருக்குள்ளான சமாதானம் இன்று நமக்குள் இருக்கிறதா?
…எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும், உங் கள் சிந்தைகளையும், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:7).
ஜெபம்: சமாதானத்தின் தேவனே, நீர் அருளும் மெய் சமாதானத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.