கிறிஸ்துவின் வருகை நிச்சயம்
தியானம்: 2020 பிப்ரவரி 2 ஞாயிறு | வேத வாசிப்பு: யாக்கோபு 5:7-11
“…கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” (யாக்கோபு 5:8).
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலே தமது இரண்டாம் வருகையைக் குறித்து பல தடவை கூறியுள்ளார். அவரது சீஷர்களும், அப்போஸ்தலர்களும், முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் அவரது வருகையை எதிர்பார்த்திருந்தனர். “கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்” (1தெச.4:16) என்று பவுல் எழுதியுள்ளார். எபிரெயர் 9:28ல் “கிறிஸ்துவும் இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்” என்றும், யாக்கோபு 5:8ல் “கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே” என்றும், 2பேதுரு 3:10ல் “கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறவிதமாய் வரும்” என்றும் அவரது வருகையைக் குறித்து தெளிவாய் சொல்லப்பட்டுள்ளது. லூத்தரன் சபையை நிறுவின மார்ட்டின் லூத்தர் அவர்கள், “இயேசுகிறிஸ்து நேற்று மரித்தார், இன்று உயிர்த்தெழுந்தார், நாளை மறுபடியும் வருவார் என்ற விசுவாசத்துடனேகூட வாழுகிறேன்” என்றார். அந்தளவுக்கு அவர் இயேசுகிறிஸ்துவின் வருகையை எப்போதும் எதிர்பார்த்தவராக வாழ்ந்தார்.
கிறிஸ்து தம்முடையவர்களை சேர்த்துக்கொள்ள திரும்ப வருவார் என்ற நிச்சயம் நமக்குண்டா? உண்டானால், நமது தெரிந்தெடுப்புகள், மதிப்பீடுகள், தீர்மானங்கள் எல்லாமே இந்த வெளிச்சத்திலே சரிபார்க்கப்பட்டு, இதே எண்ணத்தோடே செயற்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால், வாழ்க்கை இன்று போலவே என்றும் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம், அது தவறு. நோவாவின் காலத்திலும் மக்கள் அப்படித்தான் எண்ணினார்கள். நடக்கப்போவதைக் குறித்து அறிவிக்கப்பட்டும், அக்கறையின்றி, எப்போதும் போலவே மக்கள் வாழ்ந்தார்கள். “ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும் வந்தார்கள். அதுபோலவே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” (மத்.24:38,39) என்று ஆண்டவரே எச்சரித்துள்ளார்.
அன்பானவர்களே, ஒருபோதும் வார்த்தை பொய் சொல்லாது. இந்த வார்த்தையை விசுவாசிக்கின்ற நாம் அப்படியாக அலட்சியமாயிருக்கலாகாது. இயேசு மறுபடியும் வருகிறார் என்ற எண்ணத்தோடும், பயத்தோடும், விழிப்புணர்வுடனும் வாழுவோமாக. நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இயேசுவின் வருகையை நோக்கியே இருக்கிறது என்பதை மறவாதிருப்போம். நிச்சயம் இயேசு மறுபடியும் வருவார், நாம் அவரைச் சந்திக்க ஆயத்தமா?
“…காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (கொலோ. 4:5).
ஜெபம்: மீண்டும் வரப்போகிற நியாயாதிபதியாகிய எங்கள் ஆண்டவரே, நிர்விசாரங்களை எங்களைவிட்டு நீக்கி எச்சரிப்பின் சத்தத்துக்கு கீழ்ப்படியும் இருதயத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.