அடையாளம் என்ன?

தியானம்: 2020 பிப்ரவரி 9 ஞாயிறு | வேத வாசிப்பு: மத்தேயு 24:1-3

“…இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன…” (லூக்கா 21:7).

நேற்றைய காரியங்களைச் சிந்தித்து, பிழைகளைத் திருத்துவதைவிடவும், இன்றைய காரியங்களைக் கவனிப்பதிலும், நாளையைக் குறித்து அறிவதிலேயும்தான் மனிதன் அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு. இதற்காகவே குறிசொல்லுகிறவர்களை நாடுவோர் அநேகர். கிறிஸ்தவர்களாகிய நம்மில் சிலர் குறிசொல்லுகிறவர்களை நாடாவிட்டாலும், யாராவது தீர்க்கதரிசனம் சொல்லமாட்டார்களா என்று தேடுவதுண்டு.

இயேசுவின் சீஷர்களுக்கும் நாளை என்ன நடக்கும் என்று அறிவதில் நாட்டம் இருந்தது. அன்று யூதருக்குத் தங்கள் தேவாலயத்தைக் குறித்துப் பெருமை இருந்தது. இயேசுவின் சீஷர்கள் அந்தத் தேவாலயத்தின் கட்டடங்களை இயேசுவுக்குக் காண்பிக்கும்படி வந்தபோது, இயேசு ஒரு அதிர்ச்சி தகவலைக் கூறிவிட்டார். இந்த தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிபட்டுப்போகும் என்பதே அத்தகவல். அதிர்ச்சியுற்ற சீஷர்கள், “உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று வருங்காலத்தைக் குறித்துக் கேட்டனர். அடுத்தாற்போல் நிகழப்போகும் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை ஜீரணிக்கமுடியாத சீஷர்கள், அவற்றை விட்டுவிட்டு, எப்போதோ நடக்கவிருக்கும் சம்பவத்திற்கு அடையாளம் தேடினர். இயேசுவும், இனி வரப்போகிற கடினமான காலங்களுக்கு முகங்கொடுக்கும்படி சீஷரை ஆயத்தப்படுத்தத் தயங்கவில்லை. பொய்யான மேசியாக்கள், இயற்கை அழிவுகள், உபத்திரவங்கள் சகலத்தைக் குறித்தும் இயேசு தமது சீஷரை எச்சரித்தார். ஆனால், அவற்றின் மத்தியிலும் தாம் அவர்களுடன் கூடவே இருப்பதாகவும், அவர்களுக்கூடாக தமது ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதாகவும், முடிவிலே, தமது ராஜரீகத்திலே அவர்களைச் சேர்த்துக்கொள்வதாகவும் வாக்களித்துத் திடப்படுத்தினார்.

கடைசிக்காலத்தில் வாழுகின்ற நாம் இந்த அடையாளங்களைக் காண்கிறோம். அப்படியிருந்தும், இனி ஒரு அடையாளத்தைத் தேடி ஓடுவது ஏன்? இயேசு சொன்னபடி எருசலேம் தேவாலயம் தரைமட்டமானது. அது போலவே ஆணடவர் சொன்ன காரியங்களில் மீதமும் நிறைவேறிவருகிறது; இனியும் நிகழும். கிறிஸ்துவின் வருகை மிகமிக சமீபித்துவிட்டதை உணர்ந்து நமது வாழ்வைச் சீர்ப்படுத்துவோமாக. சொல்லப்பட்ட அடையாளங்கள் நிறைவுபெறும்வரைக்கும் கிறிஸ்துவின் வருகை தாமதமாகும். அதற்காக, நாம் அஜாக்கிரதையாக வாழ்ந்து வீணராகாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். ஒவ்வொரு நாளையும் கடக்கும்போது, நமது மரணம், கிறிஸ்துவின் வருகை, எது முந்துமோ யார் அறிவார்?

“வானமும் பூமியும் ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்.24:35).

ஜெபம்: நீதியுள்ள தேவனே, உமது வருகையின் அடையாளங்கள் நிறைவேறி வரும் இந் நாட்களில் அதைக் குறித்து அலட்சியமாக இராதபடிக்கு உமது வருகைக்கு ஆயத்தப் பட கிருபை தாரும். ஆமென்.