மாய்மாலம் எடுபடாது!
தியானம்: 2020 மார்ச் 15 ஞாயிறு | வேத வாசிப்பு: வெளி.3:1-6. யோவான் 16:7-16
“…தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர்…” (வெளி. 3:1).
முகத்துக்கு நேரே பேசுகிறவர்களின் பேச்சு நம்மைப் பக்குவப்படுத்தும். ஆனால், தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவனின் புகழ்ச்சி நம்மை வீழ்த்தி நாசமாக்கிவிடும். ஆனால், உள்ளும் புறம்பும் அறிந்த ஒருவர் முன்பாக இந்த மாய்மாலம் ஒருபோதும் எடுபடாது, இல்லையா!
செல்வச் செழிப்புமிக்க சர்தை பட்டணத்தின் ஒரு பகுதி மலையுச்சியில் அமைந்திருந்தது. பின்னர் மக்கள் தொகை அதிகரித்தபோது, இதன் மற்றப்பகுதி பள்ளத்தாக்கிலே கட்டப்பட்டது. இயல்பாகவே இந்தப் பட்டணத்தில் உச்சியும் பள்ளத்தாக்கும் எப்படி அமைந்திருந்ததோ, இங்கிருந்த சபையும், மலையுச்சியிலுள்ள ஒரு உயிருள்ள சபையைப்போலக் காட்சியளித்தாலும், அதற்குள் பல தாழ்விடங்கள் இருந்தன. மொத்தத்தில், ஆவிக்குரிய சாவை அடைந்த செத்த ஒரு சபையாக இச்சபை இருந்திருந்ததை ஆண்டவர் அறிந்திருந்தார். இந்த சபைக்கு, முழு அதிகாரமும் கொண்ட, சகலத்தையும் அறிந்திருக்கின்ற ஒருவரே தேவைப்பட்டது. ஆகவேதான், இயேசு தம்மை, ‘ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர்’ என்று வெளிப்படுத்தினார். ஏழு ஆவிகள் என்றால், ஏழு விதமான ஆவிகள் அல்ல; முழுமையான கிரியைகளைக்கொண்ட பரிசுத்த ஆவியானவரையே இது குறிக்கிறது (யோவான் 16). இவரே எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறவர்; அவரிடம் மாய்மாலம் பண்ணலாமா? அடுத்து, ஏழு நட்சத்திரங்கள், ஏழு சபைகளின் தூதர்கள் (வெளி.1:20). சபையை கர்த்தருக்கு நேராக நடத்துகின்ற இவர்களே மாய்மாலம் பண்ணினால் கர்த்தர் பொறுத்திருப்பாரா? ஆகவேதான், நீங்கள் என் கைகளில் இருக்கிறீர்கள் என்கிறார். இந்தச் சபை, தேவபணிகளில் சிறந்து விளங்கியது. உலகம் இச்சபையை உயிருள்ள சபை என்று கணக்கிட்டது. ஆனால் கர்த்தரோ, நீ செத்தவனாயிருக்கிறாய் என்கிறார். வெளியே நற்பெயர் எடுத்திருந்த இந்தச்சபை உள்ளே செத்துப் போனதாய் இருந்தது. அதாவது தேவனைவிட்டு விலகிச் சென்றதாய் இருந்ததை இயேசு கண்டார்.
நமக்கு அருளப்பட்ட இரட்சிப்பின் வஸ்திரத்தை மறைவிலே கறைப்படுத்தி விட்டு, உலகுக்கு நம்மைப் பரிசுத்தராகக் காண்பிக்கின்ற இந்த விளையாட்டு வேண்டாம். ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று நமக்கு ஒரு பெயர் தேவையா? அந்தரங்கத்தை ஆராய்ந்து அறிகிறவர் ஆவியானவர். உள்ளும் புறமும் சுத்தமான வெளியரங்கமான வாழ்வை நாடுவோம். மாய் மாலங்கள் வெளிப்படுமானால், நமக்குத்தான் வெட்கம்.
“வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை. வெளிக்கு வராத மறை பொருளுமில்லை” (மாற்கு 4:22).
ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, மாய்மாலமான வாழ்வை வெறுத்து எனது இருதயத்தில் உள்ளும் புறம்பும் பரிசுத்தமான வாழ்வு வாழ கிருபை தாரும். ஆமென்.