அந்த அன்பு!

தியானம்: 2020 மார்ச் 22 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 13:21-35

“நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 13:34)”.

ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பது ஒரு புதிய கட்டளை அல்ல. லேவி.19:18ல் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கட்டளையாகும். அப்படியானால் இயேசு சொன்னது என்ன? “நான் உங்களில் அன்பாயிருந்தது போல…..” இதைத்தான் இன்று ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

இயேசு காட்டிய அன்பு எப்படிப்பட்டது? நான் அன்பாயிருந்ததுபோல… என்று கடந்த காலத்தில் சொல்லுவதில் இனி தாம் அடையப்போகிற சிலுவைப்பாடு நிமித்தம் காட்டும் அன்பைக் குறிப்பிடவில்லை. அது இன்னுமதிக மேன்மையானது. இதுவரை இயேசு காட்டிய அன்பு எத்தகையது? பன்னிருவரும் தம்மை விட்டு ஓடிப்போவார்கள் என்று தெரிந்தும் கடைசிப் பந்திவரை அவர்களோடு இருந்தாரே, அந்த அன்பு! துணிக்கையை தோய்த்து யூதாஸ் கையில் கொடுத்து, செய்கிறதைச் சீக்கிரமாய் செய் என்று சொன்னதும் யூதாஸ் எழுந்து போனானே, அப்போதும்கூட தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனைக் காட்டிக்கொடுக்காமல் நின்றாரே நம் ஆண்டவர். அந்த அன்பு! தரித்திரருக்கு ஏதாவது கொடுக்கும்படிதான் இயேசு யூதாஸை அனுப்பினார் என்று எண்ணிய சீஷரிடம் யூதாஸைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தாரே, அந்த அன்பு! மாத்திரமல்ல, எச்சரித்தும், சேவல் கூவும் என்று அடையாளம் சொல்லியும், பேதுரு மறுதலிப்பான் என்று தெரிந்திருந்தும் அதைக்கூட யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருந்தாரே, அந்த அன்பு!

பிரியமானவர்களே! அன்பு என்பது வெறும் உணர்ச்சியல்ல. அது செயலில் வெளிப்படுகின்ற செயற்பாடு. நான் நேசிக்கிறேன் என்று சொல்லிப்போவது வெகு எளிது. ஆனால் எனக்கு இழப்பு வந்தாலும் அடுத்தவனுக்கு உதவுவது, அது அன்பு. என் சந்தோஷம் கெட்டாலும் அடுத்தவனின் ஆறுதலைக் கணக்கிடுவது, அது அன்பு. அதிலும் மேலாக, ஒருவன் துரோகம் செய்வான் என்று தெரிந்தும் அவனைக் காட்டிக்கொடுக்காமல், அமர்ந்திருப்பது, அதுவன்றோ மேலான அன்பு. நாமென்றால், சும்மா இருப்போமா? ஆகக் குறைந்தது ஜெபத்திற்கு என்றுச் சொல்லி, விஷயத்தை வெளிப்படுத்திவிடுவோம், முறுமுறுப்போம். காட்டிக்கொடுக்கப் போகின்றவன் என்று திட்டவட்டமாகத் தெரிந்தும் வாய்மூடி மௌனமாக நின்றாரே நம் இயேசு, அந்த அன்பையே கர்த்தர் நம்மிடமும் எதிர்பார்க்கிறார். அந்த அன்பு நமக்கும் வேண்டுமென்று ஜெபத்தோடு தேவனிடம் வேண்டுவோம்.

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் (யோவான் 13:35).

ஜெபம்: “காட்டிக்கொடுக்கிறவனையும் காட்டிக்கொடுக்காத, மாசற்ற, அன்பு நிறைந்தவரே, அந்த அன்பு என்னிலும் வெளிப்பட கிருபை புரியும், ஆமென்”