துன்பத்திலும் இயேசுவை நேசிப்பாயா!
தியானம்: 2020 ஆகஸ்ட் 2 ஞாயிறு | வேத வாசிப்பு: வெளி. 1:1-3
“…தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான் (வெளி.1:2).
சீனாவிலே கலகம் ஏற்பட்ட காலத்தில், ஒரு மிஷன் பாடசாலை முற்றுகையிடப்பட்டது. அதின் ஒரு வாசலைத் தவிர ஏனைய வாசல்களை மூடிவிட்டனர். திறக்கப்பட்ட அந்த வாசலின் முன்பாக ஒரு சிலுவையை வைத்து, அதை மிதித்து செல்பவர்கள் சுதந்திரமாய் செல்லலாம்; மாறாக, அதைத் தள்ளி நடப்போர் கொல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. முதல் ஏழு மாணவிகளும் அதை மிதித்துக்கொண்டு வெளியேறினார்கள். எட்டாவதாக வந்த மாணவி குனிந்து சிலுவைக்கு முன்பாக முழங்காற்படியிட்டாள்; மறுகணமே அவள் சுட்டுக் கொல்லப்பட்டாள். ஏறத்தாழ நூறு மாணவிகள் அவளைப் பின்பற்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படி இன்று நமது சபை வாசல்களில் நடந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாமே சிந்திப்போம்.
இயேசுவின் சீஷர்கள் அனைவருமே ஏறத்தாழ தமது விசுவாசத்தினிமித்தம் வதைபட்டே இறந்தனர். யோவானும் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயில் போடப்பட்டதாகவும், ஒரு பாதிப்பும் இன்றி அவர் வெளியேறியதாகவும் ஒரு சம்பவம் சரித்திரத்திலுண்டு. இந்த யோவான்தான், ஒருவரும் இல்லாத பத்மு என்ற தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். தனிமை, வெறுமை, பசி, அத்தீவின் எல்லாப் பயங்கரங்களும், எதற்காக? மரித்தால் ஒரு நிமிடந்தான். ஆனால் யோவானோ உயிருடனேயே வதைபட்டார், ஏன்? இயேசுவிற்கு சாட்சி பகர்ந்ததற்காகவே! யோவான் வெறுப்படைந்து இயேசுவை மறுதலித்திருக்கலாம். ஆனால் இயேசுவின் அன்பை யோவானால் மறுதலிக்க முடியவில்லை. யோவான் இயேசுவின் அன்பினால் ஈர்க்கப்பட்ட ஒரு அன்பான சீஷன். யோவான் எழுதிய சுவிசேஷமும், மூன்று நிருபங்களும் ஆண்டவரின் அன்பையே மையமாக கொண்டுள்ளன. தான் அனுபவித்த அன்பை யோவான் எழுத்தில் வடித்திருக்கிறார். யோவானின் அன்புள்ளம் ஆண்டவருக்கு மறைவாயிருக்கவில்லை. யோவான் பத்மு தீவில் விடப்பட்டபோதும் அங்கும் ஆண்டவர் அவருடனேகூட இருந்தார். தனிமையில், துன்பத்தில், வேதனையின் மத்தியில்தான் உலகத்தை அசைக்கின்ற மகிமையின் தரிசனத்தை யோவான் பெற்றுக்கொண்டார்.
பிரியமான தேவபிள்ளையே, நீ மெய்யாகவே தேவனுடைய மாசற்ற அன்பை ருசிக்கிறாயா? அப்படியானால், முழு உலகமுமே உனக்கு எதிர்த்துவந்தாலும் நீ கலங்கவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், தேவாதி தேவன் உன் பக்கத்தில் இருக்கிறார். மரணம்தான் நேர்ந்தாலும், தேவனை மறுதலிக்காமல், அவரது மகிமையின் இரகசியத்தைப் பெற காத்திருப்பாயா?
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும் (1யோவான் 2:5).
ஜெபம்: அன்பின் தேவனே, “உம்மை நேசிக்கிறேன், நேசிக்கிறேன்” என்று பாடுகிற நான் உண்மையாகவே உம்மில் அன்புகூருகிறேன். ஆமென்.