ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர் – அக்டோபர் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை சேர்த்துக் கொள்ளும்படியாக சீக்கிரம் இவ்வுலகிற்கு வரவுள்ள இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகள், தொலைகாட்சி நிகழ்ச்சி, இணையதளம், மற்றும் Whats app/SMS ஆகியவற்றின் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். உங்கள் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் சக விசுவாசிகளுக்கும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வையுங்கள். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு தேவன் தந்துள்ள ஆதரவாளர்களுக்காக (Sponsors) அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலினால் நாம் சந்தித்துவரும் இன்னல்களையும் துயரங்களையும் நம் தேவன் அறிந்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். நம் அனைவரது தேவைகளை சந்திக்கும்படியாகவும் இந்த இக்கட்டுகாலத்திலிருந்து மீண்டு வருவதற்கும் பாரத்துடன் வேண்டுதல் செய்கிறோம். இந்நாட்களில் கர்த்தரோடுள்ள உறவை நாம் ஒவ்வொருவரும் புதுப்பித்து அவருக்குப் பிரியமான வழிகளில் நடக்க குடும்பமாய் தீர்மானிப்போம். அவரது வருகையை எதிர்பார்த்து வாழும் நம் ஒவ்வொருவரையும் பரிசுத்தப்படுத்தி அவர் தம்முடன் சேர்த்துகொள்ள வல்லவராய் இருக்கிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். … நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவா.14:1-3).

இவ்விதழில் செப்டம்பர் மாத தியானத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தாய் தகப்பன்மாரை கனம் பண்ணுதல், பராமரித்தல், குடும்ப உறவை பரிசுத்தமாக பேணி காப்பதைக் குறித்தும் விளக்கியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரர் தர்மகுலசிங்கம் அவர்கள் பலவித தலைப்புகளில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் ஊன்ற கட்டுகிறதற்கும் ஏதுவாக தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்க மறவாதீர்கள். இத்தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்