பிரதான கற்பனை

தியானம்: 2020 செப்டம்பர் 1 செவ்வாய் | வேத வாசிப்பு: உபா.6:4-6 மத்.22:35-40

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (மத்.22:37).

“செய்யக்கூடாததைக் கணக்கு வைத்து, அதை எப்படிச் செய்வது என்று குழம்பி தவிப்பதைப் பார்க்கிலும், செய்யவேண்டியது எது என்று தீர்க்கமாக அறிந்துகொண்டு, அதை உத்தமமாக செய்ய முயற்சிப்போமானால், செய்யவேண்டியது வெற்றிகரமாக நிறைவேறும்; செய்யக்கூடாதது தானாகவே ஒதுங்கிவிடும்” என்றார் ஒரு பிரசங்கி.

தமக்கு சாட்சியாக இருக்கும்படி அழைத்த இஸ்ரவேலுக்கு, தேவன், மோசே மூலம் ‘செய்’ என்றும் ‘செய்யாதே’ என்றும் நியாய விதிமுறைகளை கொடுத்திருந்தார். அன்றைய பரிசேயரோ, செய்யவேண்டியது செய்யக்கூடாதது என பல துணை கட்டளைகளைத் தமக்கென உருவாக்கியிருந்தனர், ஒரு நியாயசாஸ்திரி இயேசுவிடம் வந்து, “பிரதான கற்பனை எது” என்று கேட்டான். கர்த்தர் அருளிய பத்து கற்பனைகளையும் சராம்சமாக்கிய இயேசு, ஒன்றோடொன்று இணைந்து நிற்கும் இரு கட்டளைகளை கூறினார். முதலாவது, தேவனிடத்தில் முழுமையாக அன்புகூருவது; இரண்டாவது, நம்மிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவது. இவ்விரண்டையும் பிரித்து பார்க்கமுடியாது. உண்மையாகவே தேவனிடத்தில் அன்புகூருவோமானால் அவரே நமக்கு ஒரே தேவன் என்பது வெளிப்படை. அவர் நம்மைப் படைக்கும்போதே தம்மை தேடுகின்ற இருதயத்தை நமக்குள் வைத்துவிட்டார். ஆனால் மனிதனுடைய விழுகையுடன் இது கறைப்பட்டுப் போயிற்று. என்றாலும் தேவனை தேடுகின்ற தேடுதல் நமக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதன் தனித்து வாழமுடியாது. அவனுக்கு ஒரு பெலன் தேவை. அது தேவனைத் தேட வைக்கிறது.

பிரியமானவர்களே, நாம் தேவனை முழு உள்ளத்தோடு அன்புகூருவது மெய்யென்றால், அவரது நாமம் அவமதிக்கிற விதமாக ஒருபோதும் நடக்கமாட்டோம். உண்மை அன்பு இருந்தால், மெய்யாகவே தேவனுக்கு கீழ்ப்படிந்திருப்போம். “என்னில் அன்புகூர்ந்து, நான் சொல்வதைக் கேட்டு கீழ்ப்படிந்திருப்பதையே என் மகளிடத்தில் எதிர்பார்க்கிறேன்” என ஒரு தாய் கண்ணீரோடு கூறினாள். ஒரு தாயின் ஏக்கம் இப்படியிருக்க, தேவனின் ஏக்கத்தை நாம் புரிந்து கொள்கிறோமா? “மகனே, மகளே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று ஆண்டவர் கேட்கிறார். நமது நேசத்தை அவர் எதிர்பார்க்கிறார். இல்லாவிட்டால் இந்தக் கற்பனைகளைக் கொடுத்திருப்பாரா? பாவத்தில் நாம் விழுந்துபோனாலும் அவரை நாம் நேசிக்க வேண்டுமென்பதே தேவனுடைய ஆவல். அதற்காகவே தமது அன்பை முதலில் அவரே நமக்குச் சிலுவையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னமும் நாம் என்ன சொல்லுவோம்?

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் (1யோவான் 4:1).

ஜெபம்: அன்பின் தேவனே, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று நாங்கள் பாடுகிறபடியே அந்த அன்பை நடைமுறையில் வெளிப்படுத்தி காட்ட கிருபை தாரும். ஆமென்.