ஆசிரியரிடமிருந்து…
(ஜனவரி-பிப்ரவரி 2021)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
உன்னதமான தேவனின் ஈடு இணையற்ற நாமத்தில் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கர்த்தருடைய பெரிய கிருபையினாலே மற்றுமொரு புதிய ஆண்டிற்குள்ளாக பிரவேசிக்க தேவன் உதவி செய்துள்ளார். நம்மை தமது உள்ளங்கையில் செதுக்கி வைத்துள்ள தேவன் இப்புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் அவருடைய திருவுளச் சித்தத்தின்படியும் தம்முடைய உண்மையுள்ள வாக்குகளின்படியும் நம்மை ஆசீர்வாதமாய் நடத்துவார். நமது அனுதின வாழ்க்கைக்குரிய சகல காரியங்களிலும் கர்த்தர் நம்மோடிருப்பார். ஆகவே, தம்முடைய ஐசுவரியத்தின்படியே நம்முடைய குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குகிற சர்வவல்ல தேவன்மேல் நம்பிக்கை வைத்து தைரியமாய் முன்னேறுவோம்.
2020ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். ஃபீபா வானொலியில் ஒலிபரப்பாகி வந்த சத்தியவசன நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதத்திலிருந்து நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது. அதற்கு மாற்று ஏற்பாடுகளை ஜெபத்தோடு முயற்சித்து வருகிறோம். டிசம்பர் 7ஆம் தேதி Zoom செயலியின் வாயிலாக நடைபெற்ற Back To The Bible கிறிஸ்துமஸ் கீத ஆராதனையில் அநேக விசுவாச பங்காளர்கள் பங்கெடுத்தீர்கள். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.
ஜனவரி மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்கள் புத்தாண்டுக்குள் பிரவேசித்திருக்கும் நம் ஒவ்வொருவரும் பிரயோஜனமடையும்படியாக தியானங்களை எழுதியுள்ளார்கள். பிப்ரவரி மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் உங்கள் யாவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம்.

பங்காளர்கள் வாசகர்கள் யாவருக்கும் சத்தியவசனம் ஊழியர்கள் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்
