பரிபூரண தேவநடத்துதல்

அதிகாலை வேளையில்…
(ஜனவரி-பிப்ரவரி 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 1சாமுவேல் 29


இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான் (1சாமுவேல் 29:10).


ஆண்டவருக்கு பயந்து பக்தியும் நீதியுமாய் வாழும்பொழுது, நாம் செல்லும் பாதை எதுவாயிருந்தாலும் தேவன் நம்மை நடத்துவார் என்ற உறுதி நமக்கு உண்டு. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் (சங்கீதம் 37:23).

சவுல் அரசன் தனது மதியீனத்தால் தன்னையும் தனது நாட்டையும் அழிவுக்கு நேராக நடத்திச் செல்வதை இஸ்ரவேல் மக்கள் அனைவரும் அறிந்துகொண்டனர். பெத்லெகேமியனான தாவீதின் மீது அவன் கொண்டிருந்த பகையுணர்வும் வெறுப்பும் தாவீதை அவனுடைய சொந்த நாட்டை விட்டு அலையவைத்தது. பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம் பண்ணி களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்பதை அறிந்த தாவீது அப்பட்டணத்தை மீட்பதற்கு விரைந்தான். பெலிஸ்தர்களை விரட்டி அக்குடிகளை இரட்சித்தான். அப்பட்டணத்தைத் தன்னுடைய தலைமையிடமாக சில காலம்; அவர் வைத்திருந்தார் (1 சாமு. 23:1-6).

ஆனால் தாவீது தங்கியிருக்கும் இடத்தை அறிந்து அவனை சவுல் துரத்துவது வழக்கமாயிருந்தபடியால் தாவீது அங்கிருந்தும் தப்பியோட வேண்டியதாயிற்று (1சாமு.23:7-14). இந்த நிலையற்று அலையும் காலங்களிலும் தாவீது அறுநூறு பேரை தன் பக்கமாய் இழுத்திருந்தான். ஆனாலும் அந்த காலங்கள் அவனுக்கு வருத்தமும் துன்பமும் நிறைந்த நாட்களாகவே அமைந்திருந்தன. இறுதியில் அவன் தன் நாட்டை விட்டு பழைய எதிரியான பெலிஸ்தர்களிடம் அடைக்கலமாக வேண்டியதாயிருந்தது.

தாவீது கோலியாத்தை கொன்றான் என்று எதிரிகள் நினைவில் வைத்திருந்தாலும் தற்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவுக்கு எதிரி என்பதால் தாவீதோடும் அவன் மனிதர்களுடனும் பெலிஸ்தியர் விருப்பமற்ற ஓர் உடன்பாடு செய்து கொண்டனர். தாவீது காத் தேசத்து அரசரின் அனுமதியுடன் சிக்லாக்கை ஓராண்டுக்கும் மேலாக தன்னுடைய தலைமையிடமாகக் கொண்டிருந்தான் (1சாமுவேல் 27:1-7). சூர் வனாந்தரத்தின் தென்பகுதியில் குடியிருந்த கோத்திரங்களைப் படையெடுத்து கொள்ளையடித்து பெலிஸ்திய அரசனுக்கு உதவியாக இருந்ததால் (1சாமு.27:8-12) ஆகீஸ் அரசனின் நட்பையும் நன்மதிப்பையும் தாவீது பெற்றுக்கொண்டான். இஸ்ரவேலரைத் தவிர மீதி மக்களின் மீது படையெடுத்துச் செல்லும் வரையிலும் காரியங்கள் நன்கு நடந்தேறின. ஆனால் அந்த சூழ்நிலையும் மாறியது.

பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூட்டினார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள். தாவீதுக்கு இது ஓர் இக்கட்டான நிலை; தன்னுடைய சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமான பெலிஸ்தியரின் படையைச் சார்ந்திருந்தான். அவன் என்ன செய்வான்? தேவன் இந்த சிக்கலான நிலையிலிருந்து எவ்வாறு அவனை விடுவிப்பார்?

தாவீது இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அதிக நேரம் காத்திருக்கவில்லை. தன்னுடைய மக்களுக்கு எதிராக தாவீது எவ்வாறு யுத்தம் செய்வான் என்று பெலிஸ்தருடைய பிரபுக்கள் சந்தேகப்பட்டார்கள். பெலிஸ்தரைக் கொன்று மீண்டுமாக சவுல் அரசரின் நம்பிக்கையைப் பெறுவதே சிறந்த வழியாகும். எனவே ஆகீஸ், இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ (1 சாமுவேல் 29:10) என்று தாவீதுக்குக் கட்டளையிட்டான். பெலிஸ்தரின் சந்தேகத்தினால் தன்னுடைய சொந்த ஜனத்துக்கு எதிராக யுத்தம் செய்வதிலிருந்து தாவீதை தேவன் தடுத்துவிட்டார்.

சூடானில் உள்நாட்டு அருட்பணியின் நிறுவனரான ரோலண் வி.பிங்ஹாம் ஒருமுறை ஒரு வாகன விபத்தில் பலத்த காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மறுநாள் வரை அவர் தனது சுயநினைவைப் பெறவில்லை. நினைவு திரும்பியதும் “நான் இங்கு என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?” என்று அங்கிருந்த மருத்துவ தாதியை வினாவினார். “நீங்கள் இப்பொழுது பேசக்கூடாது; ஓய்வெடுங்கள். ஒரு விபத்தில் நீங்கள் சிக்கியிருந்தீர்கள்” என அப்பெண்மணி கூறினார். “விபத்தா? விபத்தா?” என பிங்ஹாம் ஆச்சரியத்துடன் கேட்டார். ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்விலே விபத்து என்பது கிடையாது. தேவனுடைய பூரண வழிநடத்துதலின் ஒரு நிகழ்வு ஆகும் என்று கூறினார். தேவனுடைய வழி நடத்துதலில் நம்முடைய கண்ணோட்டமும் அவ்வாறே இருக்கவேண்டும். தேவனுக்கு முன்பாக பாவமில்லாத ஓர் உத்தம வாழ்வு வாழும்பொழுது நம் வாழ்விலும் விபத்துகள் நடைபெறாது; அவையாவும் அவருடைய பூரண வழி நடத்துதலின் நிகழ்வேயாகும். தேவன் உங்களை வழிநடத்த உங்களை இன்றே ஒப்புவியுங்கள்.


அதிகாலைப் பாடல்:

தேவன் தம் பிள்ளைகளை அடர்ந்த இனிமையான புல்வெளியில் நடத்துகிறார்;
களைத்திருக்கும் அவர்கள் பாதத்தை குளிர்ந்த நீரால் குளிரப்பண்ணுகிறார்;
தண்ணீரிலும் வெள்ளத்திலும் அக்கினியிலும் நடத்தினாலும்;
அனைவரையும் தம் தூய இரத்தத்தால் கழுவி பாதுகாக்கிறார்;
பெருந்துன்பத்தின் நடுவிலும் தேவன் தரும் பாடல் நாள் முழுதும் தொடரும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை