உங்கள் விசுவாசம் எங்கே?

தியானம்: 2021 பிப்ரவரி 23 செவ்வாய் | வேத வாசிப்பு: லூக்கா 8:22-25

அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார் (லூக்கா 8:25).

நமது வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளுக்கும், பதட்டமான நிலைகளுக்கும் நமது ஜெபக்குறைவும், விசுவாசமின்மையும்தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. நமது ஜெபத்தில் நமக்கே நம்பிக்கையில்லை. அதனால் தான் ஏதாவது பிரச்சனை வந்ததும் பெரிய ஊழியர்களையும், ஜெபவீரரையும் தேடி ஓடுகிறோம். நாம் முழங்கால்களை முடக்கி ஜெபித்தால் ஆண்டவர் கேட்க மாட்டாரா? “உங்கள் விசுவாசம் எங்கே” என்று அன்று ஆண்டவர் சீஷர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி, இன்று நமக்கும் பொருத்தமான கேள்விதான்.

சீஷரோடுகூட படகில் செல்லும்படி, இயேசுதான் சீஷரை அழைத்தார். இப்பொழுது இயேசு நிம்மதியாக படகில் நித்திரை செய்துகொண்டிருக்கிறார். ஆனால் படகு நடுக்கடலில் தத்தளித்து ஜலத்தினால் நிறைந்தபோது, அவர்கள் பயந்து நடுங்கி இயேசுவை எழுப்பி, “நாங்கள் மடிந்து போகிறோம்” என்று முறையிடுவதைக் காண்கிறோம். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் விசுவாசம் எங்கே” என்கிறார். “ஏன் பயந்தீர்கள். நீங்களும் தைரியமாக ஜெபித்திருக்கலாமே. என்னைக் கூப்பிடுகிற உங்கள் விசுவாசத்துக்கு என்ன நடந்தது” என்று கேட்பதுபோல இருக்கிறது அல்லவா!

ஆனால் அவர்களோ அதை விடுத்து, “இவர் யார்? காற்றும் கடலும் இவருக்கு அடிபணிகிறதே” என்றதான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்களே தவிர, தாங்கள் விசுவாசத்தில் குறைவுபட்டிருப்பதைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. நாமும் இப்படித்தான்; நமது விசுவாசக் குறைவைக்குறித்து கவலைப்படாமல், பதட்டமடைந்து, குழம்பிப்போய் மற்றவர்களையும் குழப்பிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. இந்நாட்களில் நமக்கும் தேவனுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தி, நமது விசுவாசத்தை உறுதிப்படுத்திக்கொள்வோம். நமக்கும் தேவனுக்குமான உறவு எப்போதும் உறுதியாக இருந்தால்தான் நாமும் விசுவாசத்தில் பெலனுள்ளவர்களாய் இருக்கலாம். விசுவாசத்தில் உறுதிகொண்டு இருந்தால்தான் பிரச்சனைகள் வரும்போது எதிர்த்து நின்று போராடலாம், வெற்றிகொள்ளலாம். பிரச்சனை வந்த பின்னர் விசுவாசத்தில் வளர்ந்திட முடியாது. எபேசியர் 6 இல் சொல்லப்பட்டதுபோல நாம் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்தவர்களாய் ஒரு போர்வீரனைப்போல எந்நேரமும் போருக்கு ஆயத்தமாய் இருக்கவேண்டும். அதிலும் விசுவாசம் என்னும் கேடகம் நமக்கு மிக அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள் (எபேசி. 6:16).

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, எங்களுக்கு நேரிட்ட பிரச்சனையான வேளைகளில் நாங்கள் விசுவாசத்தில் குன்றிப் போயிருந்திருக்கிறோம். எங்களை மன்னியும். விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாய் முன்னேறிச்செல்ல எங்களுக்குதவும். ஆமென்.