செயற்படுத்து!

தியானம்: 2021 பிப்ரவரி 26 வெள்ளி | வேத வாசிப்பு: லேவி.19:1-2; 11-18

உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் (லேவி.19:2).

பொதுவாக லெந்து நாட்களில், அன்றாடம் செய்கிற சில காரியங்களைச் செய்யாமல் நிறுத்திவிடுகிறவர்கள் பலர். முகநூலைப் பாராமல் இருப்போரும் உண்டு. இவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு, எதைத்தான் இந்நாட்களில் புதிதாகச் செய்கிறோம்? செய்தவற்றை நிறுத்துகின்ற நாம், செய்யவேண்டியவற்றைச் செய்யத் தவறுகிறோம். வெளிப்பார்வைக்குத் துக்கித்து நிற்கிற நாம் நமது உள்வாழ்விலே எப்படி இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்து சரி செய்வது தேவனுக்குப் பிரியமானதாயிருக்கும்.

இன்றைய பகுதியிலே தேவனாகிய கர்த்தர் மோசே மூலமாக பல கட்டளைகளை தன் ஜனங்களுக்குக் கொடுப்பதைக் காண்கிறோம். அவற்றில், நான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் மிக முக்கிய கட்டளையாயிருந்தது. இதன் விளக்கமாக, களவு செய்யாதிருங்கள், பொய் சொல்லாதிருங்கள், பிறனை ஒடுக்காதிருங்கள், தேவனின் நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்காதிருங்கள், கோள் சொல்லித் திரியாதிருங்கள் என்று அநேக கட்டளைகளும் கொடுக்கப்பட்டன. ஆனால், அர்த்தமற்ற நமது சில செயற்பாடுகளை அர்த்தமின்றியே நிறுத்துவதில் நாம் காட்டும் கரிசனை, நாம் செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிற காரியங்களை செய்வதில் நாம் குறைவுபட்டிருப்பது ஏன்? இந்த லெந்து நாட்களில் இதைக் குறித்துச் சிந்தித்து, தேவனுடைய விருப்பத்தைச் செய்ய ஆரம்பிப்போமா! இவ்வாறு முயற்சி செய்ய முன் வரும்போது, தேவாவியானவர் நிச்சயம் நமக்கு உதவி செய்து வழி நடத்துவார். பிரியமானவர்களே, நாம் தேவசித்தத்தைச் செய்ய தீர்மானித்து முயற்சி செய்யும்போது, தேவாவியானவர் நமது பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார். நாம் முயற்சிக்காமல் எதுவும் முடியாது. நாம் பெலவீனர் என்று நொண்டிச் சாக்குக்களைச் சொல்லியவண்ணம் இருப்போமானால் நமது வாழ்வில் முன்னேற்றம் காண்பது கடினமாயிருக்கும்.

எனவே அன்பானவர்களே, இயேசுவைப்போல வாழ, அவரது சிந்தையைத் தரித்துக்கொள்ள எத்தனிப்போம். தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். தேவன் வெறுக்கிறதான குணாம்சங்களை நம்மைவிட்டு அகற்றி, தேவன் விரும்பும் காரியங்களை நாடுவோமாக. தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறதோ அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி தீர்மானம் பண்ணிக்கொள்வோம். பாவத்தை வெறுப்போம். பரிசுத்தமாய் வாழ முயற்சிப்போம்.

ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்துக்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக (ரோ.6:12).

ஜெபம்: அன்பின் ஆவியானவரே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்கி பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடு பூரணப்படுத்துவதற்கு எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.