ஆசிரியரிடமிருந்து…
(மார்ச்-ஏப்ரல் 2021)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நமக்காக பாவமாக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் யாவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழ் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம், சத்தியவசனம் இணையதளம், வாட்ஸ் அப் ஆகியவற்றின் வாயிலாக தினமும் இத்தியானங்களை பல்லாயிரக்கணக்கானோர் வாசித்து ஆவிக்குரிய வாழ்வில் கர்த்தருக்குள் பெலனடைந்து வருகிறார்கள். அநேகருடைய சாட்சிகளை அறிந்து கர்த்தரைத் துதிக்கிறோம்.
சத்தியவசன வானொலி பணிகளுக்காகவும் தொலைகாட்சி ஊழியங்களுக்காகவும் பங்காளர்கள் ஜெபித்து உற்சாகமாய் தாங்கிவருகிறீர்கள். நன்றி கூறுகிறோம். 2019ஆம் ஆண்டிலே நிறுத்தம் செய்திருந்த சத்தியம் டிவி நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தெரியப்படுத்துகிறோம். இந்நிகழ்ச்சிகளில் குடும்பமாக பங்குபெற்று ஆசீர்வாதம் பெறுங்கள்.
2020ஆம் ஆண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை 7ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். பங்காளர் குடும்பங்களிலே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும், அவர்கள் தேர்வுகளுக்காகவும் ஜெபிக்கிறோம்.
இவ்விதழில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் மார்ச் மாதத்தில் லெந்து நாட்களில் நாம் தியானிப்பதற்கான தியானங்களையும், ஏப்ரல் மாதம் 18 முதல் 30ஆம் தேதி வரை பாவத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய சத்தியங்களையும் எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்திகளை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்க மறவாதிருங்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் நாம் ஆவியில் பெலன்கொண்டு விசுவாசத்தில் நிலைத்திருக்க உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
கே.ப.ஆபிரகாம்
