அதிகாலை துதி

அதிகாலை வேளையில்…
(மார்ச்-ஏப்ரல் 2021)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: சங்கீதம் 113:1-9


சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக (சங்.113:3)


இச்சங்கீதத்தின் ஆசிரியர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. ஒரு சில வேத விரிவுரையாளர்கள்; இதனை சாமுவேல் தீர்க்கதரிசி எழுதினார் என்றும், வேறு சிலர் தாவீது எழுதினார் என்றும் கூறுகின்றனர். இதன் ஆசிரியர் யாராயிருந்தாலும் இது ஒரு சிறந்த எழுத்தாளரின் இலக்கிய நடையில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வைப் பதிவு செய்யும் எந்த புது எழுத்தாளரும் கேட்கும் யார், என்ன, எப்பொழுது, எங்கே மற்றும் ஏன் என்ற ஐவ்வகை வினாக்களுக்கும் இங்கே பதில் கிடைக்கிறது. இவ்வாறு எழுதுவதற்கு அந்த இளம் எழுத்தாளரை ஆர்வமூட்டியது எவை என நாம் காண்போமா?

யார்?

யார் துதிக்கவேண்டும்? என்று இந்த ஆசிரியர் கேட்கிறார். நாம் அனைவரும். இச்சங்கீதத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதில் அடங்குவர். குறிப்பாக கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என வசனம் 1 கூறுகிறது. மற்ற மக்களைவிட தேவனுடைய ஊழியக்காரர்கள் தேவனைத் துதிக்கும் செயலில் அதிகம் ஈடுபடவேண்டும். தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நாம் நமது கடமையை வெளிப்படையாய்த் தெரிவிக்கவேண்டும். தேவனைத் துதிப்பதற்கான காரணங்களை நாம் நன்கு அறிந்துள்ளோம். அவருடைய துதியை அறிவிப்பதற்கு நாமே சிறந்த கருவிகள்.

யாது?

கர்த்தரைத் துதித்தலே தேவனுடைய ஊழியக்காரரின் முதற்கடமையாகும். கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். துதியுங்கள் என்ற சொல் ஒரே வசனத்தில் இருமுறை வந்துள்ளது மிக முக்கியமானது. நாம் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டுள்ளோம். எனவே இயல்பாகவும், இடைவிடாமலும் நாம் அவரது துதியைச் சொல்லவேண்டும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக தேவனைப் போற்றுவது மிகவும் குறைவே. எனவேதான் சங்கீதக்காரன் நம்மைத் தூண்டியெழுப்புவதும் உற்சாகப்படுத்துவதும் அவசியம் என எண்ணினார். தேவனைத் துதியுங்கள் என்று பலமுறை கூறி நாம் அதில் உறுதியாய் இருக்க நம்மை ஊக்கப்படுத்துகிறார்.

எப்பொழுது?

தேவனுடைய ஊழியக்காரர்கள் தேவனைத் துதிக்கும் காலத்தைக் குறிப்பதற்கு சங்கீதக்காரர் ஒரு சொற் கோவையை உபயோகப்படுத்துகிறார். அதனை எபிரெய தீர்க்கதரிசிகளைவிட பழங்கால கிரேக்க கவிஞர்கள் அதிகம் பயன்படுத்தினர். அது சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக என்பதாகும் (3).

இக்கவிதை நடையானது தேவனுடைய நாமத்தைத் துதிப்பதற்கு, பகல் நேரம், விழித்திருக்கும் காலம், பொருத்த மான நேரம் அல்லது பொருத்தமற்ற நேரம் என்று எதுவுமே தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு கிடையாது என்று தெரிவிக்கிறது. சூரியன் உதிக்கும் நேரம் தொடங்கி – அதாவது அதிகாலை முதல் அது மறையும் காலம் மட்டும் இடைவிடாமல் தேவனுடைய நாமத்தைத் துதிக்கவேண்டும். அது நாள் முழுவதும், நமது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய நமது ஒரு சிறப்பு உரிமையாகும்.

எங்கு?

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைத் துதித்துப் புகழவேண்டும் எனில் அதற்கான இடம் எது? கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது என்றாலும் அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். தேவனுடைய பிரசன்னம் எங்கெல்லாம் அறியப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது நாமம் துதிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நமது கடமையாகும். எனவே உன்னதமான வானங்களிலும் கீழே தாழ்ந்த பூமியிலும் அவருடைய நாமத்தை நாம் துதிக்கவேண்டும். தேவனைத் துதிப்பதற்கு எப்படி காலவரையில்லையோ அதுபோன்று இடத்துக்கும் வரையரை கிடையாது. தேவனுடைய ஊழியக்காரர்களாக நாம் அவரை எல்லா இடங்களிலும் இடைவிடாமல் துதிக்க வேண்டும்.

ஏன்?

தேவனைத் துதிப்பதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு. அவர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவரது மகிமை வானங்களுக்கு மேலானது. ஆயினும் அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். ஏழைகளை பிரபுக்களாக மாற்றுகிறார். மலடிக்கு குழந்தைச் செல்வங்களை அருளி மகிழ்ச்சியான வீட்டைக் கட்டுகிறார்.

இந்தநாளிலும் தேவனுக்கு நமது தேவைகளைத் தெரியப்படுத்தும் ஜெபக் குறிப்பை நாம் எழுதுவதுபோல, தேவனைத் துதிக்கும் குறிப்புகளையும் ஏற்படுத்துவோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனைத் துதிக்கும் காரியங்களை எழுதி வைத்திருக்க வேண்டும். முதலாவது தேவனுடைய அன்பிலிருந்து ஆரம்பியுங்கள். அவருடைய மரணம், நமக்கு அருளின இரட்சிப்பு மற்றும் காலை முதல் மாலை வரை அவர் நமக்குச் செய்த நன்மைகளை குறிப்பெடுத்து துதியுங்கள். நமது ஜெபக் குறிப்பைப் போன்று துதிக் குறிப்பும் எண்ணிலடங்காதவைகளாய் அமைந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும்.


அதிகாலைப் பாடல்:

ஆ! என்னில் நூறுவாயும் நாவும் இருந்தால்
என் ராஜாவாம் தேவனின் மகிமையையும்,
என் அருமை இரட்சகரின் துதியையும்,
கிருபையின் வெற்றியையும் நாள்முழுவதும்
ஓயாத்தொனியாய் பாடுவேன்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை