தேவன் நம்மையும் அழைக்கிறார்!
தியானம்: 2021 ஏப்ரல் 17 சனி | வேத வாசிப்பு: யோவான்; 21:15-22
நீ என்னைப் பின்பற்றி வா என்றார் (யோவான் 21:22).
“என்னை உள்ளபடியே ஆண்டவரிடம் ஒப்புவித்தபோது, என் வாழ்வில் எங்கெல்லாம் விழுந்தேனோ, எங்கெல்லாம் தோற்றுப்போனேனோ, அந்தந்த இடங்களில் தோல்வியைச் சந்தித்தவர்கள் மத்தியில் ஆறுதலின் பாத்திரமாக ஆண்டவர் என்னை உருவாக்கினார்” என்று ஒருவர் தனது வாழ்வில் தேவன் செய்ததை தேவனுக்கே சாட்சியாகக் கூறினார். நாம் எங்கே விழுகிறோமோ, அந்த இடத்திலேயே ஆண்டவர்தாமே நம்மைத் தூக்கி நிறுத்துகிறார்.
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரானாகிய கிறிஸ்து” என்று பரலோகத்திலிருக்கிற பிதாவினால் வெளிப்படுத்தப்பட்டு அறிக்கை செய்தவன் பேதுரு. “மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று அறிக்கை செய்யப்பட்ட விசுவாசத்தைக் குறித்து இயேசுவால் குறிப்பிடப்பட்டவனும் இந்தப் பேதுருதான். “நான் உம்மோடு மரிக்கவும் தயார்” என்றும் சொன்னவன், சோதனையில் விழுந்துபோனான். இயேசு ஏற்கனவே எச்சரித்திருந்தும், “இவரை அறியேன்” என்று மூன்று தரம் இயேசுவை மறுதலித்தான். இப்படியிருந்தும், உயிர்த்தெழுந்த ஆண்டவர் கடலோரத்தில் சீஷர்களுக்கு மூன்றாம் தடவையாகத் தரிசனம் கொடுத்தபோது, மும்முறை மறுதலித்தவனிடம் மும்முறை கேட்கிறார், “நீ என்னில் அன்புகூருகிறாயா?” பேதுரு துக்கமடையுமளவு திரும்ப திரும்ப கேட்டார். பேதுருவின் அன்பைச் சோதிக்கும்படியாகவா கேட்டார்? இல்லை, பேதுருவை உறுதிப்படுத்தும்படிக்கே கேட்டார். தமது ஆடுகளுக்குரிய அதாவது சபைக்குரிய பொறுப்பைக் கொடுக்கிறார். அவனுக்கு நேரிடப்போகிற மரணத்தையும் குறிப்பிட்டார். ஆனால் அங்கேயும் பேதுருவின் பழைய குணம் மெதுவாக வெளிப்பட்டது, யோவானைக் காட்டி, “இவன் காரியம்” என்னவென்று கேட்க, இயேசு: “நீ என்னைப் பின்பற்றி வா” என்று அவன் வாயை அடைத்தார்.
நம் எல்லோருக்குமுள்ள ஒரே அழைப்பு சுவிசேஷத்திற்காகப் பாடுபடுவதுதான். அந்த அழைப்பிலே நமக்காகக் கர்த்தர் வைத்திருக்கிற நமது பங்களிப்பு வேறுபட்டிருக்கலாம். நமக்குரியதை நிறைவேற்றவே நாம் அழைக்கப்படுகிறோம். நாம் பேதுரு அல்ல; பவுலும் அல்ல. பிறரோடு நம்மை ஒப்பீடு செய்ய வேண்டியதில்லை. தேவனே தமது அழைப்புக்கேற்ப நம்மை உருவாக்குகிறவர். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். உள்ளபடியே தேவகரத்தில் நம்மை ஒப்புவித்துவிடுவோம். மற்றவற்றை அவர் பார்த்துக்கொள்வார்.
நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, … ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் (எபேசி.4:1-3).
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எனக்கென நீர் வைத்துள்ள தேவதிட்டத்தை நான் உணர்ந்து அதை நிறைவேற்றுவதற்கு உமதாவியின் பெலன் தாரும். ஆமென்.