இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா?
தியானம்: 2021 மே 6 வியாழன் | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 18:17,18
அதற்கு அவன்; இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டுப் பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றான் (18:18).
ஒருமுறை ஒரு புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒரு போட்டியில் அப்போதைய தேசத்தின் ஜனாதிபதி ஜாக் நிக்கொலாஸ், பில்லிகிரகாம் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு முடிந்தபின் எதிர் டீமில் உள்ள ஒருவர் இவரிடம், “ஹலோ! நீங்கள் ஜனாதிபதி, பில்லிகிரகாம் ஆகிய இருவருடன் விளையாடியது எப்படி இருந்தது?” என்று கேட்டார். அவர் வெறுப்புடன், “பில்லிகிரகாம் எனது தொண்டையில் சமயத்தைத் திணிப்பது பிடிக்கவில்லை” என்று பதிலளித்தார். அப்படிக் கூறிக்கொண்டு பயிற்சிதளத்துக்குச் சென்ற அவரை, கேள்வி கேட்ட அந்த நண்பர் பின்தொடர்ந்து சென்றார். அங்கே அந்த வீரர்; தனது கோபத்தையும் ஆத்திரத்தையும் பந்துபோடும் பக்கெட்டை உதைத்துத் தள்ளியதன் மூலம் வெளிப்படுத்தினார். அதைக் கவனித்த அந்த நண்பர் மீண்டும் அந்த விளையாட்டு வீரரிடம், அங்கே விளையாடிக் கொண்டிருக்கும்போது பில்லிகிரகாம் உங்களிடம் சற்று முரட்டுத்தனமாய் நடந்துகொண்டாரோ என்று வினவினார். அதற்கு அந்த விளையாட்டு வீரர், “அதை ஏன் கேட்கிறாய்? அவ்வேளையில் அவர் “சமயம்” (Religion) என்னும் சொல்லை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை” என்றார்.
எலியாவும் அதே சூழ்நிலையில்தான் தன்னை அங்கு கண்டான். எலியா வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறுவதற்கு முன்னரே ஆகாப் “இஸ்ரவேல் தேசத்தைக் கலக்குகிறவனே” என்று குற்றஞ்சாட்டினான். இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையிலேயே இஸ்ரவேலைக் கலக்கிக் கொண்டிருக்கிறவன் ஆகாப் ராஜாதான். இஸ்ரவேல் தேசத்தின்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரக்காரணம், ஆகாபும் அவனுடைய முன்னோரும் செய்த பாவங்களும், தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவங்களும் தேவனுக்கு விரோதமாகச் செய்த செயல்களுமே. தனது குற்றங்களை மறைத்து, அவற்றைப்பற்றி நினையாமல் பழியை இன்னொருவர் மீது சுமத்துவது ஆகாபுக்கு எளிதாயிருந்தது. இஸ்ரவேலின் அனைத்துக் கலக்கத்துக்கும் காரணம் என்று தேவனுடைய மனிதனாகிய எலியாவின்மேல் குற்றஞ் சாட்டினான். அவனுக்குத் தன் பாவங்களையும் மீறுதல்களையும் தேவனுக்கு விரோதமான செயல்களையும் சிந்திக்க மனதில்லை.
இந்த உலகமே குற்றஞ்சுமத்துவதற்கு சம்பந்தமில்லாத ஒரு பரிசுத்தவானைத் தேடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் குற்றஞ்சாட்டுவதற்குச் சுலபமான நபர்களாய் இருக்கிறார்கள். நம்முடைய சாட்சிகள் நாம் ஒன்றும் கூறவிட்டாலும் பலமான சாட்சிகளாயிருக்கும். நீரோவின் காலத்திலிருந்து இன்றுவரை கிறிஸ்தவர்கள் துன்பங்களையும், பாடுகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றனர். எனவே, எந்தவகையிலாவது, நீங்கள் துன்பப்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள், கவலைப் படாதிருங்கள், கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார் என்ற உண்மையைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபம்: ஜீவிக்கின்ற தேவனே, உலகம் எங்களை எந்தவிதத்தில் துன்பப்படுத்தினாலும் நாங்கள் உமக்கு இவ்வுலகில் பலமான சாட்சிகளாய் வாழ கிருபை தாரும். ஆமென்.