எப்போதும் பரிபூரணம்

தியானம்: 2021 மே 11 செவ்வாய் | வேத வாசிப்பு: 1இராஜா 18:36-39

அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து…. (1இராஜா.18:38).

பல தடவைகளில், சிறு சிறு விஷயங்கள் நம்மை ஏமாற்றி விடுகின்றன. இதற்கு ஒரு சோகமான உதாரணம் உண்டு. கீழைநாட்டு விமான சேவையில் ஒரு ஜம்போஜெட் விமானம் புளாரிடாவில் உள்ள ஆபத்தான மலைச்சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளாயிற்று. 401 என்ற எண் உள்ள இந்த விமானம் நியூயார்க்கிலிருந்து மியாமிக்கு சென்று கொண்டிருந்தது. உல்லாசமாக விடுமுறையைக் கழிக்கும் பயணிகள் அந்த விமானத்தில் நிறைந்திருந்தார்கள். மியாமி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது, விமானத்தை கீழே இறக்க விமானி எல்லா வேலைகளையும் செய்தார். இறங்குவதற்குரிய எல்லா இயக்கங்களும் சரியாக உள்ளனவா என்பதை ஒரு மீட்டர், மின்குமிழ் எரிவதன் மூலம் காட்டும். அந்த மின்குமிழ் எரியவில்லை. விமானி அறியவேண்டிய தகவல் கிடைக்கவில்லை. அந்த மின்குமிழைக் கழற்ற முயற்சித்தனர்; முடியவில்லை. அவ்வேளையில் விமானம் தன் உயர நிலையை விட்டுத் தாழ்ந்து பறந்து சதுப்பு நிலக்காட்டில் விழுந்து சேதமடைந்தது. இந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்தார்கள்.

அன்று அக்கினியினால் பலியை ஏற்றுக்கொண்ட தேவனுடைய செயலுடன், மனிதரின் செயலால் ஏற்பட்ட விமான விபத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தேவன் தமது செயலில் எந்த விபரத்தையும் தவறவிடுவதில்லை. எலியா ஜெபம் செய்தபோது தேவன் பரிபூரணமாக வேண்டுதலைச் செய்து காட்டினார். பலியை மட்டும் அக்கினி பட்சிக்க வேண்டும். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பலி, விறகு, கல், மண், தண்ணீர் ஆகிய அனைத்தையும் பட்சித்து பூரண நிலையைக் காட்டிவிட்டது. இந்தச் செயலைக் கண்ட மக்கள் “கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்” என்று ஆர்ப்பரித்தார்கள். அக்கினியை அனுப்பி பலியைப் பட்சிக்கிற தேவனே பரிபூரணமுள்ள தேவன்.

அன்பானவர்களே, நீங்கள் ஜெபம் பண்ணும்போது முழு விபரங்களையும் ஆண்டவர் நிறைவேற்றுவார் என்று நம்புங்கள். அவர் எதையும் கண்டுகொள்ளாமல் விடமாட்டார். உங்களுடைய ஆவிக்குரிய நல்வாழ்வுக்குத் தேவையான வைகளைத் தேவன் தந்தருளுவார். அவருடைய கவனத்திலிருந்து ஒரு அணுவும் தப்பமுடியாது. உங்களுடைய எந்தப்பிரச்சனையும் தேவனுக்குப் பெரிதல்ல. அவரால் அனைத்தையும் மாற்றிவிட முடியும். உங்கள் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் அவரிடம் ஒப்படையுங்கள். உங்கள் விண்ணப்பங்களை அவரிடம் தெரிவித்துவிட்டு நுணுக்க விளக்கங்களை அவர் பொறுப்பில் விட்டு விடுங்கள். அவரை விசுவாசிப்பீர்களா?

தேவனுக்கு எந்தப் பிரச்சனையும் பெரிதல்ல; எந்த விளக்கமும் மிகவும் அற்பமானதுமல்ல. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

ஜெபம்: உன்னதமான தேவனே, எனது எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க வல்லவராயிருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.