என்னைத் தாங்கிடும் கிருபை!
தியானம்: 2021 ஜுன் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 73:1-28
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. (சங். 94:18).
நமது வாழ்க்கைப் பாதை நமக்கு எப்போதும் நியாயமானதாகவே தெரிகிறது. நமது நினைவுகளும் திட்டங்களும்கூட சரியானதாகவே தோன்றுகின்றன. வீதியிலே ஒரு சரியான நோக்கோடு நடந்துசெல்லும் ஒருவர், நினையாத நேரத்தில் பாதையிலுள்ள சிறுகுழியிலும் மண்மேடுகளிலும் கால் சிக்கி விழுந்துவிடுகிறார்; அதேபோல, சரியான பாதை என்று நாம் எண்ணும் பாதையிலும் இடர்கள் வரத்தான் செய்யும். நினைவுகளும் திட்டங்களும் திடீரென்று சரிய ஆரம்பிக்கும். துன்மார்க்கர் தளைக்கும்போதும், நமக்கு தீங்கு செய்கிறவர்களும் நம்மைத் தள்ளிவைப்பவர்களும் மேன்மையடையும்போதும், நமது மனம் குழம்புகிறது. அதற்கு இடமளிப்போமானால் நிற்கிறோம் என்கிற நாமும் சற்று சறுக்கி விழத்தான் செய்வோம். தேவபிள்ளையே, நிதானத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்திருக்கிற உன் வாழ்விலும் சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதா? விடை காணமுடியாத பல கேள்விகள் உன்னைச் சோர்வடையச் செய்கின்றனவா? சறுக்குகின்ற உன் கால்களைத் தூக்கிவிடுவார் யார் என்று ஏங்கி நிற்கிறாயா?
தேவன் நிச்சயம் பதில் தருவார். எருசலேம் தேவாலயத்தின் பாடற்குழுவின் பிரதான தலைவனும், துதி கீதங்கள் இசைப்பவனுமாகிய ஆசாப்பின் கால்கள் கூட சறுக்கிவிட்டதாம். அதாவது, “துன்மார்க்கர் செழித்தோங்குவதைக் கண்டு பொறாமை கொண்டேன். நான் விருதாவாகவே என் இருதயத்தை சுத்தம்பண்ணி குற்றமில்லாமையிலே என்கைகளைக் கழுவினேன்” (சங்.73:13) என அலுத்துக் கொண்டான் ஆசாப். இதுதான் அவனுடைய சறுக்கல். ஆனால், அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது உண்மையைக் கண்டான். துன்மார்க்கரின் முடிவை அவனால் உணரமுடிந்தது. அப்போது, தன் நினைவை மாற்றிக்கொண்டவனாக, “ஆனாலும், என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” என்றான்.
தேவபிள்ளையே, உன் மனக்குழப்பத்திற்கு காரணங்கள் என்ன? எதுவாயிருந்தாலும் தேவனது சமுகத்திற்குள் போக மாத்திரம் மறந்துவிடாதே. அங்கே தான் உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நீ விழுந்துவிட முன்னதாகவே, அவரது ஒப்பற்ற கிருபை உன்னை மறுபடியும் ஜீவபாதையிலே நிலை நிறுத்தும். கூப்பிடும் சத்தத்தைத் தேவன் கேட்கவும், நம்மைத் தாங்கிக்கொள்ளவும் நாம் எம்மாத்திரம்? ஆனால், அதுவே அவரது “கிருபை” என்று அறிந்துகொள். உன் நினைவுகள் தத்தளிக்க ஆரம்பிக்கும்போதே தேவனை நோக்கிக் கூப்பிடு. உனக்குப் பிரியமானவர்கள் உனக்கு எதிராகத் திரும்பும்போது, உன் மீட்பரை நோக்கி அபயமிடு. உன் சூழ்நிலைகள் உடனே மாறாவிட்டாலும், தேவன் நிச்சயம் உன்னைத் தாங்குவார்.
ஜெபம்: என்னைத் தாங்கி நடத்தும் தேவனே, என் வாழ்வில் என்ன நேர்ந்தாலும், மனக் குழப்பமடையாமல், உமக்குள் திடமாகவும் ஸ்திரமாகவும் நிற்க பெலன் தாரும். ஆமென்.