ஆத்துமாவின் ஆறுதல்!
தியானம்: 2021 ஜுன் 30 புதன் | வேத வாசிப்பு: சங்.31:1-7; 2கொரி.1:2-4
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (சங். 94:19).
எனது வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என்ற ஓர் உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். “நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் நான் விசாரப்படுகிறேன்” (சங்.38: 17,18) என்ற சங்கீதக்காரனின் ஜெபத்தை ஏறெடுத்தேன். என் இதயத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் அலைமோதின. இதனைப்படிக்கும் நண்பரே, நீரும் உம் உள்ளம் உடைந்த நிலையில் தத்தளிக்கிறாயா? கலக்கத்தைவிட்டு, கர்த்தரை நோக்கிப்பார். என்னைத் தாங்கிய தேவவார்த்தையே உன் சிறுமையில் உனக்கு ஆறுதலும் மீட்பும் அருளுவதற்கு வல்லமையுள்ளதாக உன்னிடத்திற்குக் கடந்து வரும் (சங்.119:49,50).
இன்னும் ஒரு தடவை, பயங்கர வியாதியினால் தாக்குண்டு, உள்ளத்தில் விசாரங்கள் பெருக செய்வதறியாமல் தவித்திருந்தேன். மூன்றாம் நாளிலே கர்த்தர்தாமே யோர்தான் நதியிலே தாம் செய்த மகத்தான அற்புதத்தை நினைவுபடுத்தி என்னை ஆறதல்படுத்தினார் (யோசுவா 3:1-17). என் ஆத்துமா தேற்றப்பட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். தேவன் தமது கிரியையை என்னில் ஆரம்பித்தார். தேவபிள்ளையே, மரண போராட்டத்தில் அகப்பட்டு உன் உள்ளமும் விசாரத்தினால் நிரம்பியிருக்கிறதா? தேவன் உன்னை தேற்ற வல்லவராயிருக்கிறார். இப்படியே பலவித காரணங்களினால் பெருகும் விசாரங்களும், என்னவாகுமோ என்ற அங்கலாய்ப்புகளும், குடும்பம் உடைந்துவிடுமோ என்ற ஏக்கங்களும் துக்கங்களும் பெருகி நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளம்”.
பிரியமானவர்களே, பவுலடியார் நமது தேவனுக்கு ஒரு அருமையான நாமம் ஒன்றைச் சூட்டியுள்ளார். “சகலவிதமான ஆறுதலின் தேவன்”. இதிலே ‘சகல’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ஆம், சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல் செய்கிறவர் (2கொரி.1:3,4), “அவரே நம் உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறவர்” (சங்.31:7), “அவர் நம் ஆத்துமாவைத் தேற்றுகிறவர்” (சங்.23:3). இவ்வார்த்தைகள் பொய்யல்ல. வியாகுலங்கள் பெருகும் நேரங்கள், நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று தவிக்கும் நேரங்கள்தான், தேவனுடைய அன்புக்கரத்தின் ஆறுதலை நாம் அதிகமாக அனுபவிக்கும் நேரம். அப்போது, விசாரங்களுக்கு மேலாக வியக்கத்தக்க மகிழ்ச்சியால் நமது ஆத்துமா நிரம்புவதை அறிந்துகொள்ளலாம். ஆத்தும வியாகுலங்களை நான் அனுபவித்திருக்கிறேனா? இன்று யாரை நான் தேடி நாடுகின்றேன்?
ஜெபம்: எங்களைத் தேற்றும் தேவனே, உம்மை மறந்து நான் அழுகிறவனாக அல்ல, உம்மைப் பற்றிக்கொண்டு ஜெயத்தோடு எழும்ப எனக்குப் பெலன் தாரும். ஆமென்.