ஆசிரியரிடமிருந்து…
(ஜூலை-ஆகஸ்ட் 2021)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
வாதை நம் கூடாரத்தை அணுகாமல் பாதுகாக்கும் அன்பின் தேவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கோவிட்-19 இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தற்போது நமது தேசத்தில் நிலவிவரும் துயர சம்பவங்களையும் உயிரிழப்புகளையும் பார்க்கும்போது தேவன் மாத்திரமே நமது ஆதரவாயிருக்கிறார். அவரது நித்திய புயங்கள் நமக்கு ஆதாரமாயிருக்கிறது. பரவிவரும் கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து நமது தேசத்தையும் குடும்பங்களையும் அழிவிலிருந்து பாதுகாக்கவும் சபை கூடிவருவதற்கு தற்போது இருக்கின்ற தடைகள் நீங்கவும் திறப்பின் வாசலில் நின்று தொடர்ந்து மன்றாடுவோம்.
கொரோனாவின் தாக்குதலுக்குள்ளான பங்காளர்களுக்காக தொடர்ந்து பாரத்தோடு ஜெபித்து வருகிறோம். சிலர் மரணமடைந்ததை அறிந்து மனம் வருந்துகிறோம். அக்குடும்பங்களுக்கு தேவன்தாமே ஆறுதலையும் தேறுதலையும் தந்தருள வேண்டுதல் செய்கிறோம். மறுபடியும் இயல்பு நிலை திரும்பவும் லாக்டவுனினால் பாதிக்கப்பட்ட தேவபிள்ளைகளின் பொருளாதாரத் தேவைகளை தேவன் சந்திக்கவும் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளும் கல்லூரிகளும் தடையின்றி திறக்கப்படவும் பாரத்தோடு மன்றாடுவோம்.
இவ்விதழில் ஜூலை மாதத்தில் பலவித தலைப்புகளிலும் ஆகஸ்டு மாதத்தில் சாமுவேல் மற்றும் இராஜாக்கள் புஸ்தகத்திலிருந்தும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் அனைத்தும் வாசிக்கிற அனைவருக்கும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளை தங்களுடைய ஜெபங்களில் தாங்க அன்புடன் வேண்டுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெறும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கே.ப.ஆபிரகாம்