பெருமை
அதிகாலை வேளையில்…
(ஜூலை-ஆகஸ்ட் 2021)
Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: 2 சாமுவேல் 24:1-25
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது …. (2சாமுவேல் 24:11).
உங்களுடைய மாபெரும் ஒரு வெற்றிக்குப் பின்னர் நீங்கள் ஒரு மாபெரும் தோல்வியைச் சந்தித்ததை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது ஏன்? அதற்குப் பொருத்தமான விடை “பெருமை” என்பதே. பரிசுத்த வேதாகமம் பெருமைக்கான தண்டனையைப்பற்றி அடிக்கடி எச்சரிக்கிறது. நீதி மொழிகள் 16:18இல் “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என நாம் வாசிக்கிறோம். வேதாகமத்தின் பக்கங்களில் தங்களுடைய ஆணவத்தினாலும் கர்வத்தினாலும் தோல்வியைச் சந்தித்த அநேக மனிதர்களை நாம் காண முடியும்.
பெருமைக்கு தண்டனை கிடைத்ததற்கு தாவீது அரசரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதராக அவர் இருந்தார். தன்னுடைய உண்மையினாலும் தூய வாழ்வினாலும் யேகோவா தேவனின் அநேக நன்மைகளைப் பெற்றார். தன்னுடைய சிம்மாசனத்தைப் பறிக்க முயன்ற தனது இரு மகன்களிடமிருந்தும் அதனைக் காப்பாற்றிக்கொண்டார். தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளிடம் நடந்துகொண்ட பாவச்செயல் அவருக்கு அவமானத்தைக் கொண்டுவந்தது. துணிச்சல் மிக்க இந்த வெற்றிவீரன் தற்பொழுது தனது வாழ்வின் இறுதிக்கு வந்து விட்டார்.
தாவீதின் பராக்கிரமசாலிகளின் பட்டியலைத் தொடர்ந்து “கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது; இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்” (2 சாமுவேல் 24:1) என்று காணப்படுகிறது. இம்முறை தேவனுடைய ஜனங்கள் மீது அவருடைய கோபம் எழும்பினது. பொதுவாக தேவனை விட்டு தூரம் போகும் பொழுது அவருடைய சினம் எழும்பும். ஆனால் இம்முறை இஸ்ரவேல் மக்கள் எந்தவொரு குறிப்பிட்ட தவறும் செய்யவில்லை. 1 நாளாகமம் 21:1இல் “சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது” என்று வாசிக்கிறோம். இந்த பாவத்துக்கான தண்டனை அனைத்து மக்களையும் பாதித்தாலும் தாவீது அது தன்னுடைய பாவம் என்று ஒத்துக்கொண்டான். ஏன்? மக்கட் தொகை கணக்கெடுப்பு அவனது சுய மகிமைக்காகவும் பெருமைக்காகவும் எடுக்கப்பட்டது. பெருமைக்கு எப்பொழுதும் தண்டனை உண்டு.
தனது படைபலத்தை அறிந்த தாவீது உடனேயே அந்த இலக்கத்தை அறிவ தன் முகாந்தரத்தை உணர்ந்து கொண்டான். அவனுடைய இருதயம் அவனை வாதித்தது. “நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ் செய்தேன்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்று தேவனிடம் அறிக்கையிட்டான்”. தாவீது காலமே எழுந்திருந்தபோது தேவன் அவனுடைய பெருமைக்கு தண்டனையாக மூன்று காரியங்களை அவன் முன் வைத்தார். தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் உண்டாதல், மூன்று மாதம் அவனுடைய சத்துருக்களுக்கு பயந்து ஓடிப் போதல், தேசத்திலே மூன்று நாள் பயங்கர கொள்ளைநோய் உண்டாதல் முதலியன. ஆனால் தாவீதின் தெரிந்தெடுப்பு சிறப்பானதாக இல்லை. தனது எதிரிகளிடமிருந்து தண்டனை பெறுவதைவிட தேவனிடத்திலிருந்து அதைப் பெறுவதையே தாவீது விரும்பினார். அவ்வாறே அன்று காலையிலேயே கொள்ளைநோயை கர்த்தர் இஸ்ரவேலிலே வரப்பண்ணினார். அடுத்த 3 நாட்களில் இஸ்ரவேலரின் தொடர்ச்சியான பாவத்துக்காகவும் தாவீதின் பெருமைக்காகவும் எழுபதினாயிரம் மனிதர்கள் அக்கொள்ளை நோயால் இறந்தனர்.
தற்பெருமையால் அழிவு நேர்ந்ததை ஈசாபின் கதை ஒன்றிலிருந்து நாம் அறிவோம். ஒரு சிறிய குளத்தில் இரு நாரைகளும் ஓர் ஆமையும் நட்பாக இருந்து வந்தன. கோடை காலத்தில் நாட்கள் செல்லச்செல்ல அக்குளத்தின் தண்ணீர் வெப்பத்தால் வற்றி ஒரு குட்டையாக மாறிவிட்டது. எனவே அந்த நாரைகளும் ஆமையும் வேறிடத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாரைகள் எளிதாக வேறிடத்துக்குப் பறந்து செல்ல முடியும். ஆனால் ஆமையால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே அவைகள் யோசித்தன. இறுதியில் அந்த ஆமை ஓர் ஆலோசனை கூறியது. ஒரு பெரிய குச்சியின் நடுவில் ஆமை கவ்விக்கொள்ள, நாரைகள் அந்த குச்சியுடன் பறந்தால் தானும் அவர்களுடன் வந்துவிடலாம் என்பதாகச் சொன்னது. ஆமை குச்சியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள நாரைகள் அருகிலுள்ள மற்றொரு குளத்துக்கு பறந்து சென்றன. இந்த வினோத காட்சியைக் கண்டு வியந்த ஒரு விவசாயி, “ஆ! என்ன அருமையான திட்டம்! யார் இந்த சிறந்த ஆலோசனையைத் தந்தது?” என்று கூவினார். அதைக் கேட்டதும் பெருமை தலைக்கேற ஆமை “நான்தான்” என்று சொல்ல வாயைத் திறந்ததும், அது குச்சியைக் கவ்வியிருந்த பிடி நழுவி தரையில் விழுந்து இறந்தது. அதன் அழிவுக்கு அதன் பெருமையே காரணமாயிற்று.
நமது பெருமையைப் பற்றி நாமும் எச்சரிக்கையாய் இருப்போமாக; அந்த ஆமை சந்திந்த துன்பமான முடிவு நமக்கும் வேண்டாம். தாவீதின் வாழ்க்கையில் பெருமையினால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கதே. எனவே “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை (நீதிமொழிகள் 16:18) என்பதை நினைவில் கொள்ளுவோம். தாழ்மையுடன் வாழ்வோம்.
அதிகாலைப்பாடல்:
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆண்டவரே,
என் அறிவு யாவையும் விட்டொழிக்கிறேன்;
என்னைக் கழுவும், பனியிலும் வெண்மையாவேன்;
முழுவதும் என்னை அர்ப்பணிக்க உதவும்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை