விசுவாச அறிக்கை
தியானம்: 2021 ஜூலை 16 வெள்ளி | வேத வாசிப்பு: யோபு 9:1-10; 1சாமு.17:32-50
கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார் (சங்கீதம் 138:8).
இது தாவீது செய்த ஆழமான உறுதியான ஒரு அறிக்கை. “என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர், இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்” என்று அறிக்கை பண்ணிய வாலிபனாகிய தாவீது, இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலேயே பெலிஸ்தியனை மடங்கடிக்கச் சென்றார்; கர்த்தரும் அவனது அறிக்கையை மெய்ப்பித்தார்; பெலிஸ்தியன் கொல்லப்பட்டான். தாவீதின் வாலிப மனதிலேயே வேரூன்றிவிட்ட இந்த விசுவாசம் அவனது வாழ்க்கை முழுவதிலும், துன்பங்கள் சோதனைகள் மத்தியிலும் மங்கிப்போகவே இல்லை. எல்லா சமயங்களிலும் தன் தேவனையே முற்றிலுமாக நம்பியிருந்தார் தாவீது. இதனாலேயே “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்று அவனால் தைரியமாகக் கூற முடிந்தது.
நம் கண் காண்கிறவைகளும், சூழ்நிலைகளும், நம்பியிருந்தவர்களால் ஏற்படுகின்ற ஏமாற்றங்களும் நமது எதிர்காலத்தையே இருளடையச் செய்துவிடலாம். இப்படியான சூழ்நிலையில் இன்று பலர் இருக்கிறார்கள். தேவபிள்ளையே, உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் விசுவாசத்தைத் தட்டி எழுப்பவேண்டிய தகுந்த தருணம் இதுவேயாகும்! நம்மைப் பயமுறுத்தும் இருளைப் பார்த்து தயங்கி தயங்கி நிற்கக்கூடாது. நமது விசுவாசத்தைப் பயிற்றுவிக்க, பரீட்சை பார்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, ஸ்தோத்திரத்துடனே நமக்கு முன்னால் இருக்கும் இருளை நோக்கி முன்னேறிச் செல்வோம். இரும்பு கதவுக்குள்ளே அடைக்கப்பட்டது போன்ற சூழ்நிலைகளானாலும், அவற்றையும் தகர்த்தெறியும்படி நம்மைப் பெலப்படுத்த தேவனால் கூடும். ஆகவே, தேவனை நம்பி துணிந்து முன்செல்லலாம்.
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்”. இதுவே நமது அறிக்கையாக இருக்கட்டும். “யாவையும்” என்ற சொல் மிகவும் முக்கியம். கடந்த காலங்களில் கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்த காரியங்களைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாவீதைப்போல, “தப்புவித்தவர் தப்புவிப்பார்” என்று கூறலாமே! சாதாரண தலை வலியையும் இடுப்பு வலியையும்தானா நம் தேவனால் குணப்படுத்த முடியும்? “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10).
ஆகையால் சகோதரனே, சகோதரியே, யாராலும் தீர்க்கமுடியாத உன் பிரச்சனைகள் மத்தியிலும், “கர்த்தரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்று தைரியமாக அறிக்கை பண்ணு. தேவன் உன் காரியங்களை நிச்சயமாகவே செய்து முடிப்பார்.
ஜெபம்: எங்கள் பாதைக்கு வெளிச்சமாயிருப்பவரே, எங்கள் எதிர்காலத்தையே இருளடையச் செய்யக்கூடியச் சூழ்நிலைகள் வந்தாலும் நாங்கள் உமது நாமத்தில் அசையாத நம்பிக்கையோடிருக்க உமதருள் தாரும். ஆமென்.