ஏன்? ஏன்? ஏன்?
தியானம்: 2021 ஆகஸ்ட் 24 செவ்வாய் | வேத வாசிப்பு: உபாகமம் 30:11-20
இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன் (உபா.30:15).
வாழ்விலே ஒரு தரமாவது, ‘ஏன்’ என்று கேள்வி கேட்காத ஒரு மனுஷனுமே இல்லை. கடந்துபோன நாட்களில் நீங்களும் பல தடவை இக்கேள்வியைக் கேட்டு குழம்பியிருக்கலாம். நாம் விரும்பியபடி, அல்லது நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால், அல்லது நாம் சுகமாக சந்தோஷமாக இருந்தால் இக்கேள்விக்கு இடமிராது. எப்போது காரியங்கள் தலைகீழாக மாற்றமடைகிறதோ, வியாதிகள் தாக்குகிறதோ, தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கிறோமோ, அப்போது “ஏன்?” என்று தடுமாறுகிறோம். ஆனாலும் இப்போதெல்லாம், கஷ்டத்திற்குள்ளும் சந்தோஷமாயிருக்கிறோம், கர்த்தருடைய சித்தப்படி நடக்கட்டும் என்றெல்லாம் நாம் சொல்லப்பழகி விட்டோம்; என்றாலும் அந்தந்த வேளைகளிலே “ஏன்?” என்ற இந்தக் கேள்வி நம் மனதின் ஆழத்திலே வேரூன்றி விடுகிறது என்பதை மறுக்கமுடியாது.
இந்த மனநிலையிலிருந்து கூடுமானவரை வெளியே வரவேண்டும். இல்லையானால் நம்மைக் கொன்றுபோட இந்தக் கேள்வி ஒன்றே போதுமானதாகிவிடும். இக்கேள்வி நமக்குள் எழும்புவதற்கு முக்கிய காரணம், “எனக்கு இப்படி ஆகலாமா?” எனும் சுயபரிதாபமேயாகும். ஆகவே, அதைத் தவிர்த்து, இக்கேள்வியைச் சற்று வித்தியாசமாகக் கேட்டுப் பார்க்கலாமே. “இது எப்படி நடந்தது?” என்று இனிமேல் கேட்டுப்பாருங்கள். “ஏன்” என்ற கேள்விக்கு விடை கிடைக்காவிட்டாலும், “எப்படி” என்ற கேள்விக்கு கட்டாயம் விடை கிடைக்கும். ஏதேன் தோட்டத்திலே, முதலில் எந்தவொரு கேள்விக்கும் இடமிருக்கவில்லை. ஏனெனில், அங்கே பாவம் இல்லை; தெரிந்தெடுப்பு இல்லை; ஆகவே, தோல்வி என்ற மனநிலையும் இல்லை. தேவன் மாத்திரம் இருந்தார். அவரோடுள்ள உறவு, நன்மை, சந்தோஷம் ஆகிய யாவும் நிறைவாயிருந்தன. ஆனால் எப்போது நன்மை, தீமை அறியத்தக்க நிலையை மனிதன் வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொண்டானோ அப்போது தெரிந்தெடுக்கும் நிலை என்ற ஒன்று உருவானது. அதனால் வெற்றி – தோல்வி, ஆசீர்வாதம் – சாபம் என்ற இரு வேறுப்பட்ட துருவங்களுக்கிடையில்; மனிதன் போராட வேண்டி வந்தது. இதில் உண்டாகும் தோல்வி மனப்பான்மையே “ஏன்” என்ற கேள்வியை எழுப்புகின்றது.
தேவபிள்ளையே, இந்த உலகம் உள்ளவரை நன்மை தீமை இருக்கத்தான் செய்யும். உனக்கோ தெரிந்தெடுக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த சுதந்திரத்தை நீ எப்படி உபயோகிக்கிறாய் என்பதே கேள்வி. ஆகவே இனிமேல் ஏன் என்ற கேள்வி எழும்போது, உன் மீது நீயே பரிதாபப்படும் கேள்வியாக அல்ல; நிலைமையை உணரத்தக்க “எப்படி” என்ற கேள்வியாக மாற்றிவிடு. விடை கிடைக்கும். இனிவரும் நாட்களில் புதிய கண்ணோட்டத்தோடு முன் செல்வோமாக.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என் வாழ்வில் நிகழும் சம்பவங்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க அருள் செய்யும். ஆமென்.