அவசரம் வேண்டாம்!

தியானம்: ஜுன் 22 வெள்ளி; வாசிப்பு: நீதிமொழிகள் 18:1-13

காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு,
அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
(நீதிமொழிகள் 18:13)

சிலருக்கு எதற்கெடுத்தாலும் அவசரம். அவசர அவசரமாய் காரியங்களைச் செய்வதினால் பலகாரியங்களைச் சாதித்துவிடலாம் என்றுகூட அவர்கள் நினைப்பதுண்டு. ஆனால் பேச்சுக்களைப் பொறுத்தமட்டில், ஆற அமர இருந்து என்னவென்று அறிந்துகொள்ளாமல், அரைகுறையாக அவசரமாகப் பேசுவது ஆபத்தைக் கொண்டுவந்துவிடும். அத்துடன் தேவையற்ற பிரச்சனைகளையும், பிரிவினைகளையும்கூட ஏற்படுத்திவிடும்.

ஒருவர் தனது திருமண வாழ்வின் பிரச்சனைகளைப் பற்றி தன் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மூன்றாவது நபர் குறுக்கிட்டதால், அப்பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டு, அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர். திருமண வாழ்வின் பிரச்சனைகளைக் குறித்து அரைகுறையாகக் கேட்ட நண்பர், மீதியைக் கேட்கும்படிக்கு பொறுத்திராமல் அந்த அரைகுறைக் கதையை இன்னுமொருவருடன் பகிர்ந்ததால், கதைகள் இங்குமங்குமாகப் பரவி, முற்றி, அத்தம்பதிகள் பிரியப்போகிறார்களாம் என்ற கதை ஒன்று வேகமாகப் பரவத் தொடங்கியது. ஆனால், திருமண வாழ்வைப்பற்றிப் பகிர்ந்து கொண்டவர், தனது கடந்தகால அனுபவங்களையே பகிர்ந்துகொண்டதாகவும், அவர்கள் இப்போது ஆத்மார்த்தமான தம்பதிகளாய் வாழ்ந்து வருவதுதான் உண்மையென்றும் தெரியவந்தது. பார்த்தீர்களா? கதை கந்தலாகி, ஒரு அன்பான தம்பதியினருக்கு விவாகரத்து வேண்டிக்கொடுக்கும் அளவுக்குப் போய்விட்டது. எதனால் இந்த அவலம்? அவசரப் பேச்சுக்களினால்தானே!

இன்னும் சிலர் பிறர் கூறுவதைக்கேட்டு முடிக்கும் முன்பாகவே சண்டைக்குக் கிளம்பிவிடுவார்கள். ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்குமுன்பு ஒரு தீர்வுக்கு வருவதோ, பதிலுரைப்பதோ முட்டாள்தனமான காரியம். அது அவனுக்கே புத்தியீனமும், வெட்கமுமாய் அமையும் என்பதுதான் சாலொமோன் ஞானியின் தீர்ப்பு. அவசரப்படுவதினால் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. அதைவிடுத்து அமைதியாக, பொறுமையாக செயற்படுவதே அதிக பயனைத் தரும். பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி. பொறுமையானது நமது வாழ்வில் மாத்திரமல்ல, நமது பேச்சிலும், பதிலிலும் இருப்பதும் அவசியம்.

அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துப்போட்ட அனுபவங்களும், அவசரப் பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, கவலைப்பட்ட அனுபவங்களும் நமக்கு நேரிட்டிருக்கலாம். இனிமேலாவது ஜாக்கிரதையாயிருப்போம். நமது வார்த்தைகளை அவசரப்பட்டு விட்டுவிடாதபடிக்கு ஞானமாய் நடந்துகொள்ளுவோம். அது நமக்கும் நம்மைச் சேர்ந்த பிறருக்கும் பிரயோஜனமாய் இருக்கும்.

ஜெபம்: அன்பின் தேவனே, எனது அவசரப் புத்தியை மாற்றி, பொறுமையாய்ப் பேச எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.