பாவத்துக்குத் தப்பும்படி …

தியானம்: 2022 ஜனவரி 21 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 119:9-16

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்.119:11).

ஆராதனை முடிந்து வெளியில் வந்தபோது, ஒரு வயோதிபத் தாயார் வேத வசனம் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தைத் தந்தார். அதை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினேன். அன்று எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் அகப்பட நேர்ந்தது. குழம்பிய உள்ளத்துடன் எதையோ எடுக்க சட்டைப்பைக்குள் கையைவிட்ட எனக்கு அகப்பட்டது அத்தாயார் தந்த வேதவசனம் தான். அப்போதுதான் அதை ஆவலுடன் படித்தேன். நான் அகப்பட்டிருந்த சூழலில் அவ்வசனம் என்னைப் பெலப்படுத்தியது. தேவ வசனம் எத்தனையாய் வல்லமைமிக்கது! – என ஒருவர் சாட்சி கூறினார்.

இங்கே சங்கீதக்காரரும் அதைத்தான் வலியுறுத்துகிறார். “நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்” என்கிறார். தேவனுடைய வார்த்தையால் நமது இருதயம் நிறைந்திருக்கும்போது, அங்கே பாவ சிந்தனைகளுக்கு இடமிருக்காது. பாவத்திலிருந்து எளிதாகத் தப்பிக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஒரு வாலிபன் தனது வழிகளை எப்படியாகச் சுத்திகரிப்பான் என்னும்போது, தேவனுடைய வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்வதினால்தானே என்றும் சங்கீதக்காரன் எழுதுகிறார். ஆகவே, நம்மைப் பாவத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது தேவனுடைய வார்த்தைதான். அது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் உருவக் குத்துகிறதாயும் உள்ளது. பாவத்துக்குத் தப்பிக்கொள்ளும்படிக்கு நமக்கு உதவியாக இருப்பது தேவனுடைய வார்த்தைதான். நாம் எவ்வளவாய் அவற்றைத் தியானிக்கிறோமோ, எவ்வளவாய் அவற்றை மனனம் செய்து நமக்குள் தக்கவைக்கிறோமோ அவ்வளவுக்கு நாம் பாவத்துக்குத் தப்பி வாழுவதற்கு அது நமக்கு உறுதுணையாக இருக்கிறது.

அன்பானவர்களே, இன்று பலர் நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நமக்கு நேரமில்லாமற் போகிறது. யாராவது தியானித்து படித்து அதைச் சொல்லுவதைக் கேட்பதில் நாம் அதிக நேரத்தைச் செலவிட எத்தனிக்கிறோம். நாமாகப் படிப்பதற்குப் பின் நிற்கிறோம். ஆனால், தேவவார்த்தையானது அதைத் தியானிக்கிற எவருக்கும் ஆசீர்வாதமாகவே அமையும். அதில் என்ன சந்தேகம்? நாமேதான் அதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளவேண்டும். தியானத்துக்கும் ஜெபத்துக்கும் அதிகளவு நேரம் ஒதுக்கிக்கொள்ள இக்காலத்திலாவது பழகிக்கொள்வோம். அது நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு அதிக பெலனாய் இருக்கும்.

“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது” (சங்கீதம் 119:105).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது வார்த்தைக்கு என் வாழ்வில் முக்கியத்துவம் தந்து நேரம் ஒதுக்கி அதைக் கருத்தாய் தியானிக்க எனக்குக் கிருபை தாரும் . ஆமென்.