மறைவான சுத்தியல்!

அதிகாலை வேளையில்…
(மே-ஜுன் 2022)
Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 7:1-21


 என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது  என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே
என்னைத் தேடுவீரானால் நான் இரேன் (யோபு 7:21).


யோபுடைய வாழ்வின் அஸ்திபாரம் ஆட்டம் கண்டது. அவருடைய ஆஸ்திகள் யாவும் அழிந்தன; அவனுடைய பிள்ளைகள் அனைவரும் மாண்டனர். வழித்தோன்றல்களுக்கு வாய்ப்பு அற்றுப்போனது. கர்த்தர் யோபுவை சாத்தானுடைய கரத்தில் கொடுத்துவிட்டார். இவற்றின் காரணம் யோபுடன் தொடர்புடையவர்களுக்கு புரியவில்லை. அவரது மனைவியும் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று அவருக்கு ஆலோசனை கொடுத்தாள். ஆனால் யோபுவோ “இத்தீங்குகளை தேவன் அனுமதித்தாரானால் அது தனக்கு நன்மையாகவே முடியும்” என முழுவதும் நம்பினார்.

மற்றவர்களுக்கு புத்தி சொல்லி ஆறுதல் அளித்து வந்த யோபு, தற்சமயம் துன்பத்தில் கலங்குவதற்கு இடம் தருவதை கண்டு யோபுடைய நண்பரான எலிப்பாஸ் வியப்படைந்தார். யோபுடைய வழிகள் உத்தமமாய் இருந்தது எனில் அவர் கலங்க வேண்டிய அவசியமில்லை என்ற தவறான முடிவுக்கு வந்தார். பாவத்தின் விளைவே அனைத்து இடர்பாடுகளுக்குக் காரணம் என அவர் புரிந்துகொண்டார். எனவே யோபினுடைய பாவத்தின் விளைவே அவருடைய இத்துன்பங்களுக்குக் காரணம்; வேறு விளக்கங்கள் தேவையல்ல; இதற்குத் தப்பி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, கசப்புடன் முறையிடாமல் பாவத்தை அறிக்கையிட வேண்டும் என்று அவர் கூறினார். யோபு தன் நண்பரின் பேச்சினால் மன வருத்தம் அடைந்தார். எலிப்பாஸ் யோபுடைய வழக்கைப் பெரியதாக்கி அவருடைய நிலையை இன்னும் மோசமாக்கினார். எவ்வித காரணமும் இல்லாமல் தன்னைச் சுற்றிலும் வாழ்க்கை தரைமட்டமானதை அறிந்த யோபுவின் நிலையை சற்றே சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய சூழலை எலிப்பாஸ் தவறாகக் கணித்துவிட்டார் என்பதை யோபு நன்கு உணர்ந்துகொண்டார்.

ஏழாம் அதிகாரத்தில் யோபு மனித வாழ்வைப் பற்றிய தத்துவங்களைத் தெரிவிக்கிறார். இப்பூமியில் மனித வாழ்வு குறைந்த எண்ணிக்கையுடையது. அது கடந்து போகும் மேகத்துக்கு ஒப்பானது. இக்குறுகிய காலத்தில் தனது வாழ்வு வேதனையும் துயரும் நிறைந்துள்ளது. யேகோவா தன்னைப் பற்றி ஏன் கரிசனையுடையவராய் இருக்க வேண்டும்? பின் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவரை விசாரிக்கவும் நிமிஷந்தோறும் அவனை சோதிக்கவும் வேண்டும்? இந்நிலையில் “வாழ்வு இறப்புக்கு ஒத்தது. விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன்” என்று விரும்பினார். யோபுவை சாத்தானின் கையில் ஒப்புக்கொடுக்க தேவன் அனுமதித்தது ஓர் இரக்கமில்லாத செயல். தனது வாழ்வு உத்தமும் நேர்மையுமாய் இருக்கும்பொழுது தேவன் ஏன் இதனை அனுமதித்தார்?

சாமுவேல் சாண்ட்விக் தன்னுடைய இளம்பிராயத்தில் உள்ளூரிலுள்ள ஒரு கொல்லரின் கடைக்குச் செல்வது வழக்கம். அக்கொல்லர் ஒரு பெரிய இரும்புத் துண்டினை இடுக்கியில் பிடித்து, அது வெண்மையாகும்வரை துருத்தியை உபயோகித்து நெருப்பில் வைப்பார். பின்னர் அவ்விரும்புத் துண்டை எடுத்து ஒரு பட்டைக்கல்லின் மீது வைத்து ஒரு சிறு சுத்தியால் தட்டுவார்; அவரது உதவியாளரான மற்றொருவர், அக்கொல்லர் அடித்த அதே இடத்தில் மற்றொரு சுத்தியால் ஓங்கி அடிப்பான். அந்தத் துண்டு அழகாக உடைந்துவிடும். அதனைக் கண்ட சாண்ட்விக் ஆர்வத்துடன், “நீங்கள் அந்த சிறு சுத்திக்கு அதிக வேலை கொடுப்பதில்லையே” என்று கேட்டான். அதற்கு அந்தக் கொல்லர் சிரிப்புடன், “தம்பி, அடுத்த மனிதர் எங்கு அடிக்க வேண்டும் என்று காட்டுவதற்கே நான் தட்டுவேன்” என்று கூறினார்.

யோபுடைய வாழ்வின் அனைத்து ஆதாரங்களும் அழிந்து போயின. அவனுடைய நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர். இந்த பேரிடர்கள் யாவும் பரலோகில் திட்டமிடப்பட்டது என்பதை அவர்கள் அறியவில்லை. யோபுவை உபத்திரவப்படுத்த சாத்தானுக்கு தேவன் அதிகாரம் கொடுத்ததையும், சாத்தான் தன்னுடைய சுத்தியலை வைத்து யோபுவை அடித்த பொழுது அவை யாவும் பரலோகப் பிதாவின் அன்பின் வழிகாட்டுதலின்படியே நடந்தது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இரும்பினை எங்கு அடிக்கவேண்டும் என்று கொல்லர் குறிப்பிடுகிறாரோ அதுபோலவே யோபுவையும் எங்கு தாக்க வேண்டுமென்றும் தேவன் கட்டளையிட்டார்.

இன்று நீங்களும் அநியாயமான விமரிசனம், தேவையில்லாத உபத்திரவங்கள், திருப்பித்தரப்படாத அன்பு இவற்றை அனுப வித்துக்கொண்டிருக்கிறீர்களா? தேவன் அனுமதிக்கும் எல்லையை மீறி சாத்தான் தேவனுடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தமாட்டான். தேவன் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். நண்பர்கள் அநியாயமாய் நம்மைக் குற்றப்படுத்தினாலும் நமது வாழ்வு தேவனுக்கு முன்பாக நீதியாக இருப்பின் சாத்தானின் எதிர்ப்புகளுக்கு நாம் கவலைப்படத் தேவையில்லை.


அதிகாலைப் பாடல்:

அனுதினமும் ஒவ்வொரு நொடியும் தேவகிருபை என்னைத் தாங்கிட,
எந்தன் துன்பத்தை சகிக்க, என் பிதாவின் ஞான நன்மையை நம்புவேன்.
அவருடைய இதயம் அளவில்லா அன்பால் நிறைந்தது.
தமக்கு சிறந்ததெனத் தோன்றியதை ஒவ்வொரு நாளிலும் தருகிறார்.
அதில் இன்பமோ, துன்பமோ, பாடுகள் இருந்தாலும்
நாம் எதைப் பற்றியும் கவலைப்படக் காரணமில்லை

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை