கொல்லும் இச்சை
தியானம்: 2022 ஜுன் 5 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 7:7-12

பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது (ரோமர் 7:8).
பசிக்கு உண்பது அவசியம். அது ஒரு தேவை, பசி இல்லாவிட்டாலும் விரும்பி உண்பது, அது ஆசை. ஒன்றை நினைத்து, ஆசைப்பட்டு, பசி உண்டோ இல்லையோ, எப்படியாவது உண்ணவேண்டும் என்று உண்பது, அது இச்சை. சர்க்கரை வியாதியுள்ள வயது முதிர்ந்த ஒரு அம்மா, தன் மகளுக்குத் தெரியாமல் சத்தம் செய்யாமல் கைகளாலேயே சீனியை அள்ளிச் சாப்பிட்டபின், ‘நான் பட்ட பாடு… இனி நான் சீனியைத் தொடமாட்டேன்’ என்று அம்மாவே சொன்னபோது, இச்சை எவ்வளவு மோசமானது என்று எண்ணிக்கொண்டேன்.
‘இச்சை என்பது மனதிலுண்டாகும் செயலாகும். தேவ சித்தத்திற்கு அப்பாற்பட்டு நாம் ஒன்றைப் பெற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற விருப்பமே இச்சை ஆகும்’ பவுல், சவுல் என்ற பெயரில் தர்சு பட்டணத்தில் வாழ்ந்தபோது, தன் அதிகாரத்தினிமித்தம் தான் செய்தவை கொடிய பாவம் என்பது அவருக்கே தெரியாது. அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைத்தான் செய்தார். பிறர் போற்றத்தக்கதாக, தனது பதவிக்குப் பெருமை சேர்க்கும்படியாகவே வாழ்ந்தார். ஆனால், எப்போது உணர்த்தப்பட்டாரோ, அப்போதுதான், தாம் செய்த கடமைகள், பெருமைக்குரிய காரியங்கள் யாவுமே கொடிய பாவச்செயல்கள், தேவனுக்கு விரோதமானவை என்று உள்ளத்தில் உணர்த்தப்பட்டார்; தனக்குள் இதுவரை இருந்தது இச்சை என்பதை உணர்ந்தார். அதனால்தான், ரோமருக்கு எழுதிய நிருபத்தில், ‘…சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது’ என்று, தான் முகங்கொடுத்த இச்சையின் செயற்பாடுகளை, தனது உண்மை நிலையை, தான் உணர்த்தப்பட்டதை வெளிப்படையாகவே துக்கத்துடன் எழுதி வைத்துள்ளார்.
அன்பானவர்களே, இன்று நமது வாழ்வுக்குத் தேவையானதை, தேவன் போதுமான அளவு தந்திருக்கிறாரே! சில குறைவுகள் இருந்தாலும், கிறிஸ்துவுக்குள் அவற்றை நிறைவாக்கும் கர்த்தர் நமக்கு இருக்கிறாரே! பத்தாவது கட்டளையில் தேவன் இச்சையைக்குறித்து நமக்கு எச்சரித்திருப்பதிலிருந்து, இச்சை என்பது பாவம் என்பதை நாம் நன்கு உணரவேண்டும். பிறனது வீடானாலென்ன, பொருளானாலென்ன, நமக்குத் தீங்கிழைக்கக்கூடிய உணவானாலென்ன, இச்சை என்ற கொடிய பாவத்திற்கு விலகியிருப்போமாக. ‘நம்மை நேசிப்பதுபோல’ நமக்காக எதையும் இச்சிக்கும்போது, நாமே நமது வாழ்வைக் கெடுத்துப்போடுகிறோம். இச்சையினால், நம்மை நாமே வஞ்சித்துவிடுகிறோமா? “…அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக் கப்படுகிறான்” இன்று நமது மனதை நாமே சோதித்தறிவோமாக. தேவனுக்குச் சித்தமில்லாத, நமக்குப் பாவத்தைக் கூட்டிக்கொள்ளக்கூடிய ஏதாவது இருக்குமானால், இன்றே சரிப்படுத்திக்கொள்வோம். தேவை, ஆசை, இச்சை ஆகிய இந்த மூன்று படிகளில் நாம் இன்று எங்கே நிற்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். தேவைகளுடன் வாழப் பழகிக்கொள்வோமாக.
ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, இச்சை பாவம் என்பதை இன்று கற்றுக்கொடுத்தீர். அந்த கொல்லும் இச்சையிலிருந்து விடுபடவும் பரிசுத்தமாக வாழவும் கிருபை தாரும். ஆமென்.