நல்மனச்சாட்சி

தியானம்: 2022 ஜுன் 22 புதன் | வேத வாசிப்பு: எபிரெயர் 9:11-15

YouTube video

…நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. (1 தீமோத்;தேயு 1:18).

வெகுவேகமாகச் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் வேகம் திடீரெனக் குறைந்தது. பின்னால் காவல்துறை வாகனம் வருவதைப் பக்கவாட்டுக் கண்ணாடியில் ஓட்டுனர் பார்த்துவிட்டார். காவல்துறை வாகனத்தைக் கண்டதும் வேகத்தைக் குறைக்கவேண்டும் என்று அவரைத் தூண்டியது எது? புதிதாக வந்த புகழ்பெற்ற சினிமாவைப் பார்ப்பதற்கு பெருங்கூட்டம். சாதாரண உடையில் வரிசையில் நின்ற ஒரு தேவஊழியர், வரிசையைமாற்றி, வேறு வரிசைக்குப் போய்விட்டார். ஏனெனில், அவர் நின்ற வரிசையில் தெரிந்தவர் ஒருவர் நின்றிருந்தார். அந்த ஊழியரை அப்படிச் செய்யவைத்தது எது? ஒவ்வொரு மனிதனும் உள்ளுணர்வு உள்ளவனாகவே பிறக்கிறான். பொய், களவு, கொலை, விபசாரம் ஆகிய எல்லாமே தவறு என்று தெரியும். பிறருக்கு விரோதம் செய்வது தவறு என்றும் தெரியும்; ஆனால், இந்த உள்ளுணர்வு சொல்லுகிறபடி நாம் செய்வதோ மிகவும் குறைவு. அதற்காக, உள்ளுணர்வு தவறா? இல்லை. மனிதன் பாவத்தில் விழுந்தபோது, இந்த உள்ளுணர்வும் பாதிக்கப்பட்டுவிட்டது.

‘விசுவாசத்துடன் நல்மனசாட்சியும் உடையவனாயிரு’ என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். எப்படி நல்மனசாட்சியுள்ளவனாய் இருப்பது? நமது உள்ளுணர்வு நமக்கு நல்லதையே உணர்த்துகிறது. ஆனால், நாம் எவ்வளவு தூரம் அதற்குச் செவி கொடுக்கிறோம் என்பதில்தான் அது நமக்குச் செய்யும் ஊழியம் உண்மையுள்ளதாயிருக்கும். ஒரு ரப்பர் நாடா இழுவுண்டு இழுவுண்டு, முன்னிருந்த நிலைக்குத் திரும்பும். அது தனது சக்தியை நாளடைவில் இழந்து விடுகிறது. அதுபோலவேதான் நமது மனச்சாட்சியும் காணப்படுகிறது. எப்படி சூடுண்ட தோலில் உணர்வற்றுப்போகிறதோ, அப்படியே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யரும் இருப்பார்கள் (1தீமோ.4:1). நமது நடக்கை பொல்லாங்காக மாற மாற நமது மனச்சாட்சியும் தீட்டுப்படுகிறது (தீத்து 1:15).

அன்பானவர்களே, பல வேளைகளிலும் நமது மனசாட்சியை நாமே ஏமாற்றுகிறோம். மனசாட்சியைக் காத்துக்கொள்ளாவிட்டால் அதுவே நாளடைவில் அசுத்தமாக மாற வாய்ப்புண்டு. பின்பு, அது நம்மைச் சரியான வழியில் நடத்தக்கூடுமா? நமது மனச்சாட்சி சுத்தமாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுவதே அந்த வழி (எபிரெயர் 9:14). ஆம், அதைத்தவிர வேறு வழியில்லை. அவரது வார்த்தை நம்மில் நிறைந்திருக்குமானால் நமது மனச்சாட்சியும் சுத்தமாயிருக்கும். தேவ வார்த்தையை நாம் புறக்கணிக்கும்போதெல்லாம் நமது மனச்சாட்சியும் மெல்ல மெல்ல மழுங்கிப்போகிறது. ‘நான் எனது மனச்சாட்சிப்படிதான் நடப்பேன்’ என்று மார்தட்டிக் கொள்ளாமல், அந்த மனச்சாட்சியைச் சுத்தம்செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் திருக்கரத்தில் ஒப்புவிப்போமாக. நல்மனசாட்சி எப்போதும் தேவ வசனத்துடன் இணங்கியதாகவே இருக்கும்.

ஜெபம்: அன்பின் தேவனே, எனது நல் மனசாட்சியை நான் காத்துக்கொள்ளும் வண்ணம் என் இருதயத்தை உமது இரத்தத்தால் சுத்திகரித்தருளும். ஆமென்.