நோவாவின் செயற்பாடு
தியானம்: 2022 ஆகஸ்ட் 8 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம்; 8:2-17

ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான் (ஆதி. 8:11).
“நான் கடவுளுக்குத்தான் ஊழியஞ்செய்கிறேன், ஆதலால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்”, “கடவுள் தேவைகளைச் சந்திப்பார்’ என்று சொல்லி, வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாய் முடங்கிக்கிடப்போரும், செய்ய வேண்டிய பொறுப்புக்களைச் செய்யாமல் கண்மூடித்தனமாய் இருப்பவர்களும் உண்டு.
இங்கே, நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் அனுப்பிய கர்த்தர், அதின் கதவை அடைத்துப்போட்டார். கர்த்தர் கதவைத் திறக்கும்போது பார்க்கலாம் என்று நோவா பேழைக்குள் சோம்பேறியாய் முடங்கிக் கிடக்கவில்லை. வெள்ளம் வற்றிவிட்டதா, நாம் வெளியில் போகும் நாள் சமீபித்திருக்கிறதா என்பதைக்குறித்து அறிவதில் அக்கறையுள்ளவராக எச்சரிப்புடன் இருந்தார். முதலில் காகம் ஒன்றை வெளியில் விட்டார். பின்னர் புறாவை அனுப்பினார். அது கால்வைத்து இளைப்பாற இடமில்லாது திரும்பி வந்தபோது, இன்னமும் பூமியில் தண்ணீர் வற்றவில்லை என்பதை அறிந்துகொண்டார். இரண்டாந்தரம் வெளியில்போன புறா, தனது அலகில் கொத்தி வந்த ஒலிவமர இலையைக் கண்டதும், நீர் வடிந்துவிட்டது என்பதையும் அறிந்துகொண்டார். எனினும், தேவனின் வேளைக்காக, அவரது கட்டளைக்காக காத்திருந்த நோவா, பேழையை விட்டுப் புறப்படும்படி தேவன் கூறிய பின்பே, வெளியில் புறப்பட்டு வந்தார். பேழைக்குள் இருந்தாலும் தனது பொறுப்புக்களில் கரிசனையுள்ளவராக, செயற்படுபவராக இருந்தார் நோவா. அவர் அசதியாயிருக்கவில்லை. கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தார், அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். இதற்கும், சோம்பேறியாய் முடங்கிக் கிடப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
ஒருவருக்கும் பாரமாயிராதபடிக்கு, எப்படித் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டார்கள் என்பதையும், இவற்றைச் செய்வதினால் நல்லதொரு முன் மாதிரியை வைத்ததாகவும் தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதுகிறார். அத்துடன், அவர் தெசலோனிக்கேய விசுவாசிகளில் சிலர் வேலை செய்ய மனதில்லாமல், வீண் அலுவற்காரராய் திரிகின்றார்கள் என்றும் எச்சரித்து உணர்த்தவும் தவறவில்லை. “தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பது உண்மைதான்.” எனினும், நாம் சோம்பேறிகளாய் வாழ அழைக்கப்படவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரது கரத்துக்குள் அடங்கி, பணியாற்றவே அழைக்கப்பட்டுள்ளோம்.
ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே (2தெசலோனிக்கேயர் 3:10).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, வீண் அலுவற்காரர்களாய் சோம்பலுள்ளவர்களாய் காணப்படாமல் தேவனுக்கென்று உண்மையாய் உழைக்கவும் உமக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும் எங்களுக்கு பெலன் தாரும். ஆமென்.