பிறர் பொருளை இச்சியாதே!

தியானம்: 2022 அக்டோபர் 5 புதன் | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 21:1-16

YouTube video

தன் மனைவி… தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை (1இராஜாக்கள் 21:25).

நீண்டகாலமாகக் குடியிருந்த வாடகை வீட்டிற்குச் சொந்தங்கொண்டாடி, வீட்டுச் சொந்தக்காரனுக்கு எதிராக வழக்காடினாள் ஒரு பெண்மணி. கணவன் தடுத்தும்; கேட்கவில்லை. வழக்கு நடந்துகொண்டிருந்த நாட்களிலே ஒருநாள் அவள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாள். நடந்த சம்பவம் இது. அநீதியாக அடைய நினைத்ததை அவளால் அடையமுடியவில்லை.

சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனை அருகே, நாபோத் என்பவனுக்கு ஒரு திராட்சத் தோட்டம் இருந்தது. ஆகாப் அந்தத் தோட்டத்தைத் தனக்குத் தரும்படி கேட்டதுடன், அதற்குப்பதிலாக வேறு ஒரு தோட்டத்தையோ, அல்லது விலைக்கிரயமாகப் பணத்தையோ தருவதாகவும் கூறினான். நாபோத், தன் பிதாக்களின் சுதந்திரமான அத்தோட்டத்தைத் தரமாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டான். ஆகாப் இக்காரியத்தைத் தன் மனைவியாகிய யேசபேலிடம் கூற, நாபோத் என்பவனைக் கல்லெறிந்து கொலை செய்துவிட்டு, அத்திராட்சத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்படி துர்ஆலோசனை கூறினாள். ராஜாவாகிய ஆகாப் சற்றும் சிந்திக்காமல் சம்மதித்தான். நாபோத் கல்லெறிந்து கொல்லப்பட்டான். இதன் விளைவாக கொலை, அபகரிப்பு ஆகிய இரண்டு பாவங்களுக்கும் அவர்கள் இருவரும்; ஆளானார்கள். கர்த்தர் இவர்களின் தகாத காரியத்தைக் கண்டு எலியா தீர்க்கதரிசி மூலம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். சிலநாட்களில் அவர்கள் இருவரும் பரிதாபமாகக் கொல்லப்பட்டார்கள். திராட்சத் தோட்டத்தை அபகரித்தபோதிலும் சீக்கிரமாக அவர்கள் இருவருடைய வாழ்வும் முடிந்துபோனது.

சாத்தானின் தூண்டுதலுக்குச் செவிகொடுத்த ஆதாம் ஏவாள், தமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்தரத்தை சாத்தானுக்குக் கையளித்துப்போட்டனர். அவர்கள் விரும்பியதும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நமக்கு நல்ல ஆலோசனை கூறுவதுபோல் அநீதியான குறுக்கு வழியையும் மனிதர்கள் கூறுவார்கள். அந்நேரத்தில் முன்ஆலோசனையுடன் வேதவாக்கியத்திற்கு இசைந்துசெல்லும் தன்மை கொண்டவர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டும். தேவபிள்ளைகள் அநீதிக்குத் துணைபோனால் ஆக்கினைக்குத் தப்பமுடியாது.

அநேக வருடங்களாக தொடர்ந்து ஒரே வாடகை வீட்டில் குடியிருக்க வசதி தந்தவர்களுக்கு எதிராக வழக்குப்போடக்கூடிய தூண்டுதல் உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? “பிறர் பொருளை அபகரிப்பதும், நம்பினவருக்குத் துரோகம் செய்வதும் தேவனுக்கு விரோதமான செயல்” அல்லவா! பிறனுடைய பொருளை இச்சியாதே என்ற கட்டளையை ஆகாப் மறந்தான். நாம் மறந்துவிடலாமா?

ஜெபம்: அன்பின் பிதாவே, மனித தூண்டுதலில் விழுந்துவிடாமல், எப்பொழுதும் உம்மையே சார்ந்து வாழும் கிருபையை எனக்குத் தந்தருளுரும். ஆமென்.