ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உன்னதமான தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இதழின் வாயிலாக தங்களைச் சந்திக்க கர்த்தர் கிருபை செய்தபடியால் ஆண்டவருக்கு மகிமையைச் செலுத்துகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். அநேகர் தங்களது ஆசீர்வாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டீர்கள். தேவனைத் துதிக்கிறோம். உங்களது ஆவிக்குரிய நண்பர்களுக்கும் தியான புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டுகிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர் சிறப்புக்கூடுகை நவம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடத்த ஜெபத்தோடு திட்டமிட்டு வருகிறோம். இக்கூட்டத்திற்கான விபரங்கள் 8ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். சென்னையிலும் அருகாமையிலுமுள்ள விசுவாச பங்காளர்கள் தாங்கள் குடும்பமாக இக்கூடுகையில் பங்குபெற்று சிறப்பிக்க அன்பாய் அழைக்கிறோம்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற செய்திகளடங்கிய புத்தக வெளியீடுகளை மறுபதிப்பு செய்துவருகிறோம். இப்பணிக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட வேண்டுதல் செய்யவும். தேவன் உங்களை ஏவுவாரானால் மனமுவந்து இப்பணிகளைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் நவம்பர் மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய சிறந்த தியானங்களை எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கிறிஸ்துமஸ் நாட்களுக்கான தியானங்களோடு மேலும் பல ஆவிக்குரிய தியானங்களையும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதுகிற தேவ பிள்ளைகளை உங்களது தனிஜெபங்களிலும் குடும்ப ஜெபங்களிலும் நினைத்து ஜெபிக்க மறவாதீர்கள். நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருக்க கர்த்தர் அனுக்கிரகம் செய்ய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்