ஆசீர்வாதத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 12:1-8; கலாத்தியர் 3:6-9

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதியாகமம் 12:2).

பரிசுத்த வேதாகமத்தில் 400 தடவைகளுக்கு மேலாக “ஆசீர்வாதம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய ஊழியங்களிலும், உரையாடல்களிலும், ஜெபங்களிலும் அடிக்கடி நாமும் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். தேவன் ஆசீர்வாதத்தின் ஊற்றாய் இருக்கிறார்; நமக்கு ஆசீர்வாதங்களை அருளுகிறார். தம் மக்களை சீர்ப்படுத்தவும் அவர்கள் தம்மை மகிமைப்படுத்தவும் அதனைச் செய்கிறார். அப்.பவுல் தன்னுடைய சரீரத்தில் தரப்பட்ட முள்ளை ஆசீர்வாதமாக எண்ணவில்லை. அதை நீக்கும்படியாக மூன்று முறை தேவனை வேண்டிக்கொண்டார். ஆனால், அது பவுலுக்கும் சபைக்கும் ஆசீர்வாதமாக மாறியது (2 கொரி.12:7-10). சிலுவை மரணத்தைத் தவிர்ப்பதற்கு இயேசுவுக்கு பேதுரு ஆலோசனை கூறினார் (மத்.16:21-28). ஆனால், இயேசு அதனை நிராகரித்து கல்வாரியில் தன்னை பலியாக்கி உலகத்தின் பல சந்ததிக்கு ஆசீர்வாதத்தை அருளினார். மேலும் எதிர்காலத்தில் தம்முடைய ஜனங்களுக்கு நித்திய ஆசீர்வாதத்தையும் தருவார்.

தேவன் நமக்குத் தரும் ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாற வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் தேக்கிவைப்பவர்களாக அல்ல, பகிர்வாளர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அதனை சுயநலமாய் தங்களுக்கென்று வைத்துக்கொள்வது, கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும். “உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதி.11:25). நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.

ஆபிரகாமும் சாராளும் தேவனை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிந்ததினால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்; முழு உலகத்துக்கும் அத்தம்பதியரை ஆசீர்வாதமாக மாற்றினார். அவர்கள் மூலமாக இஸ்ரவேல் கோத்திரமும், தேசமும் உருவானது. இஸ்ரவேலரே உலகத்திற்கு உண்மையான ஜீவனுள்ள தேவனைப்பற்றிய ஞானத்தைத் தந்தனர். இஸ்ரவேலர் மூலமாகவே நாம் வேதாகமத்தையும் இயேசு கிறிஸ்துவையும் பெற்றுக்கொண்டோம். இஸ்ரவேலரின் சாட்சி இல்லாவிட்டால் இன்றைய புறஜாதிகள் மெய்தேவனை அறியாதவர்களாயும், விக்கிரக ஆராதனைக்காரராயும் வாழ்ந்துகொண்டிருப்பர். “நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்கள்” (எபே.2:12). மாறாக, “அந்தப் படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா.3:9).

ஆபிரகாம் தனது சகோதரன் மகனை ஆசீர்வதித்து கானான் தேசத்தின் நிலப்பகுதியின் தெரிந்தெடுப்பைக் கொடுத்தான் (ஆதி.13). லோத்து போர்க் கைதியாகச் சென்ற பின் அவனை மீட்டு வந்தான் (ஆதி.14). சோதோம் அழிக்கப்படும்பொழுது ஆபிரகாமின் மன்றாட்டினால் லோத்து காப்பாற்றப்பட்டான் (ஆதி.19:1-29). ஆனால், துரதிர்ஷ்டவசமாக லோத்து ஆபிரகாமின் விசுவாச மாதிரியைப் பின்பற்றவில்லை. எனவே அவன் ஒரு குகையில், குடிவெறியில் முறையற்ற பாலியல் தொடர்புகொண்டான் (ஆதி.19:30-38). லோத்தும் அவனுடைய சந்ததியினரும் எதிர்காலத்தில் இஸ்ரவேலுக்குத் துன்பத்தையே கொண்டுவந்தனர்.

பக்திமானாகிய ஆபிரகாமும் மூன்று நிகழ்வுகளில் ஆசீர்வாதமாக இருக்க தவறிவிட்டார். பஞ்சகாலத்தில் தேவனை நம்புவதற்குப் பதிலாக எகிப்துக்குத் தப்பியோடினார், அங்கு அவர் பொய்யுரைத்து அம்மக்களுக்கு வாதை உண்டாகக் காரணமானார் (ஆதி. 12:10-20). கேராரின் அரசரிடமும் பொய்யுரைத்தார் (ஆதி.20:1-18). வாக்குத்தத்தத்தின் மகனைப் பெற்றுக்கொள்ள தன்னுடைய வழியில் செல்ல முயற்சித்தான்; ஆனால் அது, அவனுடைய குடும்பத்தில் ஒரு பெரும் பிளவை உண்டுபண்ணியது (ஆதி.16). நாம் தேவனோடு நடக்காவிட்டால் நமது குடும்பத்திலும் வெளியிலும் ஆசீர்வாதம் இருக்காது.

நாம் அனைவரும் தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறோம். ஆனால் அனைவரும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புவதில்லை. இதுதான் ஒரு நதிக்கும் குட்டைக்கும் உள்ள வேறுபாடு. சங்கீதம் 1 இல் காணப்படும் பக்தியுள்ள விசுவாசி தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்று, கனிதரும் ஒரு மரமாக மற்றவர்களுக்கு தனது ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொள்கிறான். “மரத்தை நடுகிறவன் தன்னையும் மற்றவர்களையும் நேசிக்கிறான்” என்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. கனிதரும் மரமாக வாழ்ந்து ஆசீர்வாதத்தைப் பகிரவேண்டிய கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள் (மத்.10:8).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை