ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இம்மட்டும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்தின ஆண்டவருடைய நாமத்தினாலே அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவனுடைய பெரிதான கிருபையாலும் இரக்கத்தாலும் 2022ஆம் வருடத்தை கடந்து புதிய வருடத்திற்குள் பிரவேசிக்க கர்த்தர் நமக்கு தயை செய்திருக்கிறார். கடந்திட்ட நாட்களில் எல்லாம் நம்மை வழுவாமல் பாதுகாத்து நம் தேவைகளையெல்லாம் சந்தித்து நிலைநிறுத்தின ஆண்டவருக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போம். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன் (சங்.91:15) என்ற வாக்கை விசுவாசித்து முன்னேறிச் செல்வோம். இந்த புதிய ஆண்டிலே நாம் ஏறெடுக்கும் எல்லா விண்ணப்பங்களையும் கர்த்தர் கேட்டு நம் தேவைகள் அனைத்தையும் நிச்சயமாய் தேவன் சந்திப்பார்.

2023ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் 7ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும். சத்தியவசன ஊழியத்தை கடந்த ஆண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம்.

தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2022ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். இந்த ஆண்டிலும் அநேகர் வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களும் புதிய வருடத்தில் நாம் தியானித்து கிறிஸ்துவுக்குள் வளருகிறதற்கு உகுந்த தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். ஜெபத்தோடு தியானியுங்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இந்த தியானங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். கர்த்தரின் கிருபை உங்களனைவரோடும் கூட இருக்க ஜெபிக்கும்…

கே.ப.ஆபிரகாம்