சகலமும் நன்மைக்கே!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 50:14-20

யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதியாகமம் 50:19, 20).

இவ்வசனமானது ரோமர் 8:28இல் காணப்படும் “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று அறிந்திருக்கிறோம்” என்ற பவுலடியாரின் கூற்றுக்கு ஒத்துள்ளது. நம்முடைய கண்ணோட்டத்தில் மனிதர்கள், சூழ்நிலைகள், நமது ஆண்டவரும்கூட நமக்கு எதிர்த்து நிற்பதாகத் தோன்றும். ஆனால், நமது பரமபிதா அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என அவருடைய பிள்ளைகளாகிய நாம் நன்கு அறிந்துள்ளோம். அவர் நம்மை நேசிக்கிறார்; நமக்கு நன்மை இன்னதென்று அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் நிச்சயமாகக் கூறமுடியும். இதற்கு யோசேப்பின் வாழ்க்கை மிகச்சிறந்த ஓர் உதாரணமாகும்.

அவனது தந்தை யாக்கோபு அவனை அதிகமாக நேசித்தார். அதினால் அவனுடைய பத்து அண்ணன்மார்களாலும்; வெறுக்கப்பட்டான். அவனுடைய பதினேழாவது வயதில் அவர்கள் மீதியானியரிடத்தில் அவனை விற்றுப்போட்டார்கள். எகிப்துக்குச் சென்ற அவன் அவனுடைய எஜமானனின் மனைவியால் தவறான நடத்தைக்கு வற்புறுத்தப்பட்டான். அவன் இணங்காததால்; வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றான். ஆனால் முப்பதாவது வயதில் சிறையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையானான். பார்வோன் அவனை எகிப்தின் இரண்டாவது அதிகாரியாக உயர்த்தினான். யோசேப்பின் சகோதரர்கள் இருமுறை எகிப்துக்கு வந்து தானியம் வாங்கிச்சென்றனர். அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மனம் வருந்தவும், மனந்திரும்பவும் யோசேப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டான். அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி, மன்னிப்பை அருளி, தன் தகப்பன் யாக்கோபையும் தன் சகோதரர்கள் குடும்பத்தார் அனைவரையும் தான் பராமரிப்பதாகக் கூறி எகிப்துக்கு அவர்களை வரவழைத்தான். பதினேழு ஆண்டுகள் கழித்து யாக்கோபு இறந்தபின்னர், யோசேப்பு தங்களை பழிவாங்குவான் என அவனுடைய சகோதரர்கள் பயந்தனர்.

ஆனால் யோசேப்போ நடந்தவை யாவும் தேவனுடைய செயலேயாகும்; சகலமும் நன்மைக்கே என்று அவர்களுக்கு உறுதியளித்தார். எபிரெய மக்களினம் அழிந்துபோகாதபடிக்கு தேவன் யோசேப்பை எகிப்து தேசத்தில் ஒரு கருவியாக உபயோகித்தார்.

யோசேப்புக்கு நிகழ்ந்த யாவும் அவரை ஒரு சிறந்த தலைவனாக உருவாக்க தேவன் அனுமதித்திருந்தார். ஒருவேளை யோசேப்பு தனது தகப்பனுடனே தங்கியிருந்தால், அளவுக்கு மீறிய தகப்பனுடைய பாசத்தால் அவன் சீரழிந்திருப்பான். “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” (புலம்பல் 3:27). யோசேப்பின் துன்பங்கள் யாவும் அவனை ஒரு தேவ மனிதனாக்கியது. இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாக வேதாகமம் சுட்டிக்காட்டும் உன்னத மனிதர்களுள் ஒருவராக யோசேப்பு அமைந்தான். தேவனுடைய திட்டம் அவனுடைய சகோதரர்களுக்கும் நன்மையாக அமைந்தது. அவர்களுடைய சதித்திட்டங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு ஏதுவானது. யாக்கோபும் தனது இளவயதில் சூழ்ச்சி செய்து தனது தகப்பனை ஏமாற்றினவரே. அதற்கான பலனையும் அவர் அனுபவித்தார். ஆனால், பிற்காலத்தில் தேவன் 17 ஆண்டுகள் தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாயும் சமாதானமாயும் வாழும் ஆசீர்வாதத்தையும் அருளினார். யோசேப் பின் மூலமாக முழு எகிப்துக்கும் உணவு அருளி நன்மை செய்தார். யோவான் 4:22 இன்படி இரட்சிப்பு யூதர்கள் வழியாய் இன்றைய நம்முடைய உலகத்திற்கும் வந்தது.

நீங்களும் யாக்கோபைப்போல “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” (ஆதியாகமம் 42:36) என்று அங்கலாய்க்கிறீர்களா? உண்மையில் யோசேப்புக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் நடந்ததைப்போலவே நமக்கும் நடக்கிறது. அடுத்த முறை நீங்கள் ஆண்டவரிடம் வாழ்வு கடினமாக இருக்கிறதே என கேள்வி கேட்கும்பொழுது, அவருடைய வழிகளை நாம் அறியாதிருக்கும்பொழுது, யோசேப் பின் இளவயதில் நடந்த சோதனைகளையும் தேவனுடைய இரக்கங்களையும் நாம் நினைவுகூருவோம். அனைத்தும் சர்வவல்ல தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தேவன் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார் என்பதை நாம் பார்க்கவோ உணரவோ அவசியமில்லை. ஏனெனில் தேவன் நமக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல் லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங்.119: 71).

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன் (ஏசா.12:2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை