வாக்குமாறாத தேவன்!
தியானம்: 2023 பிப்ரவரி 1 புதன் | வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 8:54-62

தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (1இராஜா. 8:56).
இப்புதிய மாதத்திற்குள்ளாக கடந்துவர நமக்குக் கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். இம்மாதத்தில் நமது தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்தித்து நமது விண்ணப்பங்களுக்கு பதிலளித்து நம்மை நடத்துவாராக! என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்று வாக்களித்தவர் நம்மை கைவிடாமல் முன்னின்று வழிநடத்துவார்.
தன் தகப்பன் இறந்த செய்தி கேட்டுப் பதறிவிட்டான் மகன். ஒரு கைக்கடிகாரத்திற்காக அவருடன் சண்டைபோட்டது, “சரி” என்று கண்ணீரோடு அவர் வாக்களித்தது யாவும் கனவுபோல இருந்தது. வீட்டுக்கு ஓடியவனை வாசலிலே நின்ற தாயின் கைகள் நிறுத்தின. அவளது கையில் இருந்த மடித்த கவரை வாங்கியவன் அவசரமாகப் பிரித்தான். கைக்கடிகாரம் ஒன்று அவனைப் பார்த்துச் சிரித்தது. கதறி அழுதான் மகன். “மகனே, உனக்கு வாக்குப்பண்ணியதை வாங்குவதற்காக உன் அப்பா இரவு பகலாக உழைத்தார். பணத்தைப் பெற்று இதையும் வாங்கிக் கொண்டு வீடு வரும் வழியிலே எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகிவிட்டார். “இக்கடிகாரத்தை என் மகனிடம் கொடுத்துவிடுங்கள், என்று கூறிவிட்டு மரித்துவிட்டார்” என்றாள் தாய். “அப்பா” என்ற அவனது கதறல் யாவரையும் அசைத்துவிட்டது.
தேவபிள்ளையே, ஒரு சாதாரண தகப்பன் தனது சொல்லைக் காப்பாற்றுவதில் இத்தனை உறுதியாக இருப்பாரானால், நமது பரம பிதா எப்படியிருப்பார்? ஒரு குழந்தைகூட இல்லாத நிலையில், “உன் சந்ததியார் நானூறு வருடங்கள் உபத்திரவப்பட்டதும் அதன் பின்னர் கானானுக்கு வருவார்கள்; இந்த தேசத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன்” என்று கர்த்தர் ஆபிராமிடம் கூறினார். இது நம்பக்கூடிய காரியமா? ஆனால் தேவனோ, தமது வாக்கை ஒருபோதும் மறந்து விடவில்லை. ஆபிரகாமுக்கு வாக்களித்தபடியும், மோசே மூலமாக உறுதிப்படுத் தியபடியும் கர்த்தர் தமது ஜனத்தை நடத்தினார். அவர்கள் எதிர்கொண்ட யுத்தங்கள் யாவையும் அவரே முன்னின்று நடத்தி, பாலும்தேனும் ஓடுகிற தேசம் என்று சொல்லுமளவுக்கு சகல வளங்களும் நிரம்பிய கானானைக் கர்த்தர் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்து ஆறுதலையும் கட்டளையிட்டார்.
“அவருடைய நல் வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப் போகவில்லை” என்று சாலொமோன் மாத்திரமல்ல, நாமும் தைரியமாகச் சாட்சி கூறலாம். ஆபிரகாமை ஆசீர்வதித்தவர், இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டவர் தமது வாக்குப்படியே தாவீதின் வம்சத்திலே மீட்பை அருளியவர், தமது பிள்ளைகளாக அழைத்துக்கொண்ட நமது விஷயத்திலே பாராமுகமாக இருந்துவிடுவாரோ? தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே (2கொரி.1:20).
ஜெபம்: எங்களை ஒருபோதும் மறந்துவிடாத அன்பின் நேசரே, நீர் எங்களுக்கு வாக்குப் பண்ணினபடியெல்லாம் எங்களை குறைவில்லாமல் நடத்திவருகிறமைக்காய் உமக்கு நன்றி, ஆமென்.