பிரியமான தொழுகை!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2012)
Dr.உட்ரோ குரோல்

சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 1:11

பழைய ஏற்பாட்டின் இறுதி நூல் மல்கியா தீர்க்கதரிசன புத்தகமாகும். இத்தீர்க்கதரிசியின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றிய குறிப்புகள் நமக்குத் தரப்படவில்லை. ஆயினும் இப்புத்தகம் தேவ மக்களுக்கு கண்டிப்பான எச்சரிப்பையும், மனந்திரும்ப இறுதி அழைப்பையும், இஸ்ரவேலுக்கு வரவிருக்கும் ஆசீர்வாதத்தின் இறுதி உறுதிப்படுத்துதலையும் தருவதாய் உள்ளது.

மல்கியாவின் நாட்களில் மக்கள் ஆவிக்குரிய காரியங்களில் அதிக அசட்டையாய் இருந்தனர். சமயம் தனது பொழிவை இழந்தது. அநேகர் நாத்திகர்களாயும் தேவனைக் குறை கூறுபவர்களாயும் மாறிவிட்டனர். ஆசாரியர்களோ மனசாட்சியற்றவர்களாய், நேர்மையற்றவர்களாய், ஒழுக்கமற்றவர்களாய் இருந்தனர். மக்கள் காணிக்கைகளையும் தசம பாகங்களையும் தேவனுக்குச்செலுத்த மறுத்தனர். அவர்களது தொழுகை வெறும் சடங்காக மாறிவிட்டது. மக்களின் ஆட்டுமந்தையில் கொழுமையான கடாக்கள் இருந்தாலும் அவர்கள் தேவனுடைய பலிபீடத்தில் ஊனமுற்றதையும் குருடானதையுமே கொண்டுவந்தனர். இஸ்ரவேல் ஜனங்களின் இந்த அலட்சிய மனப்பான்மையை வன்மையாகக் கண்டிக்கவே தேவன் மல்கியாவை அழைத்தார்.

இவரது தீர்க்கதரிசன உரையானது கேள்வி-பதில் முறையில் அமைந்திருந்தன. எனவே இவர் எபிரெய சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டார். தேவனுக்கும், அவரது ஜனங்களுக்கும் இடையே நடந்த உரையாடல்களாக இவரது தீர்க்கதரிசனம் இருந்தது. தேவனுடைய உண்மைக்கும், அவரது ஜனங்களின் உண்மையற்ற தன்மைக்கும் இடையே இருந்த வேறுபாட்டை இதில் நாம் தெளிவாகக் காண்கிறோம். மல்கியா தனது வாதங்களை அழகாக எடுத்துரைக்கிறார். ஆசாரியர்களின் ஏமாற்றுத்தனத்தை துணிந்து சாட்டையடியாக விளாசுகிறார். தேவனுடைய ஆலயத்தில் பணிபுரிபவர்கள் விக்கிரக ஆராதனைக்கும், ஊழலுக்கும் எளிதில் சாய்ந்து விட்டனர். மேலும் பலிபீடத்தின் அப்பத்தை திரும்பத் திரும்ப ஆசாரியர்கள் கெடுத்தனர். பலிபீடத்தின்மீது ஊனமுற்ற மிருகங்களை பலியிட்டு, மக்கள் அப்பலியினை வெறுக்கும்படிச் செய்தனர். மட்டுமல்லாது, வெறும் சடங்காச்சாரங்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்தனர். தங்களது பணியினை விசுவாசத்துடன் செய்யாமல் வெறும் கடமையாகவே கருதினர். இது தேவனைப் பிரியப்படுத்தவில்லை.

மல்கியா 1:11இல் தமக்குப் பிரியமான ஆராதனை எப்படி இருக்கவேண்டுமென்று தேவனே கூறியுள்ளார். சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் மல்கியாவின் காலத்தில் இது நடக்கவில்லை. ஏனெனில் புறஜாதியார் தேவனுடைய நாமத்தைத் துதிக்கவில்லை.

எனவே பூமியின் சகல ஜாதிகளும் இஸ்ரவேலின் தேவனை உண்மையாகத் தொழுதுகொள்ளப் போகும் காலத்தைப் பற்றியே இங்கு மல்கியா தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளார். இந்த ஆராதனை சூரியன் உதிக்கும் காலம் தொடங்கி அது அஸ்தமிக்கும் காலம் வரைக்கும் நடக்கும். இந்த ஆராதனை சோர்வுள்ளதாயிராமல் உற்சாகமானதாயிருக்கும்.

பழைய ஏற்பாட்டின் முடிவிலும் புதிய ஏற்பாட்டின் முடிவிலும் உள்ள வேறுபாடுகளை ஆராய்வோமானால் அது வியப்பைத் தரக்கூடியதாக உள்ளது. பழைய ஏற்பாட்டின் முடிவில் ஆராதனையானது வீண் சடங்காக இருந்தமையால் கண்டிக்கப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டின் முடிவிலோ சபையின் நடுவில் இயேசு கிறிஸ்து பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாக விளங்குகிறார். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் முடிவுறவில்லை. அது நித்தியத்தில் இயேசுகிறிஸ்து இராஜாவாக வீற்றிருக்கும் நாள்வரை தொடருவதால் நாம் தேவனைத் துதிப்போம். இன்றையநாளில் ஆதவனோடு எழுந்து, தேவனைப் போற்றித் துதித்து நம் வாழ்நாளை நிறைவு செய்வோம்.

தாவீதைப்போல நாமும் சோம்பலை ஒழித்து அதிகாலையில் தேவனை கெம்பீரமாகத் துதிப்போமாக. அவர் நம்மை இரட்சித்ததால் சகல ஜனங்களுக்குள்ளும், ஜாதிகளுக்குள்ளும் அவருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அனுதினமும் நம்முடைய நாவும், எண்ணங்களும், விரல்களும், அதாவது ஆவி, ஆத்துமா, சரீரமும் தேவனை ஆராதிக்க நம்மை அர்ப்பணிப்போமாக!

அதிகாலைப் பாடல்:

துதிகளின் நடுவே ஆதிகாலமுதல் நமது கேடயமும்
பாதுகாப்புமான மகத்துவமானவர் வீற்றிருக்கிறார் – இம்
மகிமையின் தேவனாம் இராஜாவைப் பணிந்திடுவோம்;
அவரது அன்பையும் வல்லமையையும் பாடிடுவோம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை